india

img

மாநிலங்களைப் புறக்கணித்து வேளாண் சட்டங்களை கொண்டுவர முடியாது.... பாஜக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு என்சிபி தலைவர் சரத் பவார் பதிலடி....

புதுதில்லி:
மாநில அரசுகளை ஆலோசிக்காமல், மத்திய அரசு வேளாண் சட்டங்களைக் கொண்டுவர முடியாது என்று மத்திய வேளாண் துறைமுன்னாள் அமைச்சரும், தேசியவாதகாங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார். தில்லியில் அமா்ந்து கொண்டு விவசாயம் செய்துவிட முடியாது என்றும் அவர் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை இன்றைக்குகாங்கிரஸ் எதிர்க்கிறது. ஆனால், முன்பு மன்மோகன் சிங் ஆட்சியின்போது இதுபோன்ற சட்டங்களைத் தான் காங்கிரசும் கொண்டுவர முயன்றது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு சரத் பவார் பேட்டி அளித்துள்ளார். அதில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:விவசாயிகள் போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள்தான் காரணம் என்றுபிரதமா் மோடி குற்றம் சாட்டியிருப் பது முற்றிலும் நியாயமற்றது. 40 விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீா்வுகாணாதது மத்திய அரசுதான். இதில் எதிர்க்கட்சிகளின் பங்கு ஏதுமில்லை.

அதேபோல நான் வேளாண் துறை அமைச்சராக இருந்தபோது, இதேபோன்ற சட்டங்களைக் கொண்டுவர முயன்றதாக வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்கூறியுள்ளார். அவா் கூறியதில் பாதிதகவல் மட்டுமே சரியானது. நானும்,அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், வேளாண் துறையில் சில சீா்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், இப்போதைய மத்திய அரசு செய்ததுபோன்ற நடவடிக்கையல்ல அது. அனைத்து மாநில அரசுகள், வேளாண் துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து சீர்திருத்தங்களை முடிவு செய்ய திட்டமிட்டோம்.ஆனால், இப்போதைய மோடிஅரசு, மாநில அரசுகளிடம் வேளாண்சட்டங்கள் தொடர்பாக ஆலோசனைஎதையும் நடத்தவில்லை.

தாங்கள் கொண்டு வரும் சட்டத்தை அனைவரும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி திணித்துக் கொண்டிருக்கிறது.தில்லியில் அமர்ந்து கொண்டு விவசாயம் செய்துவிட முடியாது என்பதை தற்போதைய மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அது நாட்டின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் விவசாயிகளின் பணியாகும். அதுமட்டுமல்ல, இதில், மாநிலஅரசுகளுக்கு மிகப்பெரிய பொறுப்புஉள்ளது. அவர்களைப் புறக்கணித்து விட்டு மத்திய அரசு தன்னிச்சையாக வேளாண்துறை தொடா்பாக முடிவெடுப்பது மிகப்பெரிய தவறு. தங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக யாருடனும் ஆலோசிக்காமல் சட்டத்தை இயற்றியதுதான் பிரச் சனைக்கு காரணம். ஜனநாயகத்திலும், அரசியலிலும் பேச்சுவார்த்தை, ஆலோசனைகள் மூலமே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும். மற்றவர்கள் கூறுவது எதையும் காது கொடுத்து கேட்கமாட்டோம் என்றுமத்திய அரசு கூறுவது ஜனநாயகமல்ல!

2004-ஆம் ஆண்டு நான் வேளாண்துறை அமைச்சராக இருந்தபோது, விளை பொருளுக்கு உரிய விலை கொடுத்ததன் மூலம், கோதுமை, பருத்தி, சர்க்கரை ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உயர்ந்தது. அரிசி ஏற்றுமதியில் முதலிடம் பெற்றது. இவை அனைத்தும் நமது விவசாயிகள் செய்த சாதனை.இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.

;