india

img

நெடுஞ்சாலைகள் முற்றுகை... விவசாயிகள் போராட்டம் தீவிரமாகிறது....

புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்த செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக ஞாயிறன்று நாடு முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் சாலை மறியல் போராட்டங்களாகத் தொடர்ந்தன.

ராஜஸ்தான் மாநிலத்தில் தில்லி – ஜெய்பூர் நெடுஞ்சாலையில், நர்மதா பச்சாவோ அந்தோலன் அமைப்பின் சார்பில் மேதா பட்கர், ஸ்வராஜ் இந்தியா சார்பில் யோகேந்திர யாதவ் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களின் தலைமையில் விவசாயிகள் பதாகைகளையும், செங்கொடிகளையும் ஏந்தியவண்ணம் ஞாயிறன்று தில்லியை நோக்கி பேரணியாக வந்தனர்.  தில்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை முற்றுகைக்கு உள்ளானது. ஹரியானாவிலிருந்தும், உத்தரப்பிரதேசத்தி லிருந்தும் தில்லியை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளும் போராடும் விவசாயி களால் நிரம்பி வழிந்தன.ஆயினும் விவசாயிகள் தில்லியை நோக்கிச் செல்லமுடியாதவாறு துணை ராணுவப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

விவசாயிகளின் போராட்டம் கடந்த 17 நாட்களாக நடைபெற்றுவருகிறது.  தீர்வுகாணப்படாவிட்டால் ஜெய்ப்பூர்-தில்லி நெடுங்சாலை முற்றுகையிடப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனையொட்டி ஞாயிறன்று நெடுஞ்சாலை முற்றுகைக்கு உள்ளானது.போராடும் விவசாயிகளின் தலைவர்கள் சனிக்கிழமையன்று, அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்துவிட்டு, பின்னர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால், அரசாங்கத்துடன் போராடும் விவசாயிகளின் சங்கங்களின் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று கூறியிருந்தனர். மேலும் திங்கள் முதல் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும் அறிவித்தனர்.

தில்லியில் போக்குவரத்து மாற்றம்
 ஞாயிறன்று காலை 11 மணியளவில் ராஜஸ்தான் ஷாஜஹான்பூரிலிருந்து டிராக்டர்களில் ஜெய்ப்பூர் வழியாக தில்லி நோக்கி பேரணி புறப்படும் என்றும் அறிவித்தனர்.இதனைத் தொடர்ந்து தில்லி போக்குவரத்துக் காவல்துறை, தன்னுடைய டுவிட்டர்பக்கத்தில், பயணிகள் எந்தெந்த மார்க்கங்களில்பயணித்திட வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது.தில்லி அருகேயுள்ள நொய்டா மற்றும் காசியாபாத் அருகில் உள்ள காசிபூர் எல்லை விவசாயிகளின் போராட்டத்தால் மூடப்பட்டுவிட்டது. இப்பாதையில் வரும் பயணிகள்வேறு பாதைகளில் வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

தில்லியை நோக்கி வரும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக அதிரடிப் படையைச்சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தான்மாநிலத்தில் ரெவாரியில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளனர். பல்வேறு தடுப்பரண்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  விவசாய சங்கத் தலைவர்கள் ஹன்னன்முல்லா, அசோக் தாவ்லே, அம்ரா ராம், விஜுகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

                                   *************************

அம்பானி, அதானி நிறுவனப் பொருட்களை புறக்கணிக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு  அறைகூவலுக்கு ஏற்ப டிசம்பர் 14 திங்களன்று ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க், ஜியோ கடைகளுக்கு முன்பு அம்பானி, அதானி நிறுவனப் பொருட்களை புறக்கணிக்குமாறு கட்சியின் சார்பில் கோரிக்கைகள் அட்டைகள் ஏந்தி பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

இன்று காத்திருப்புப் போராட்டம்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட   ஒருங்கிணைப்புக்குழு முடிவிற்கேற்ப,  தமிழ்நாட்டில் திங்கட்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. காவல்துறை அனுமதி மறுத்தாலும் அறிவித்தபடி காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

;