india

img

இந்திய மறுவாழ்வு கவுன்சில் சட்டத்திருத்தம்.... மாற்றுத்திறனாளி அமைப்புகளுடன் கலந்தாலோசித்திடுக.... ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசியமேடை கோரிக்கை

புதுதில்லி:
மத்திய அரசு, இந்திய மறுவாழ்வு கவுன்சில்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்குமுன்னதாக, நாட்டில் செயல்பட்டுக்கொண்டி ருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பு களுடன் கலந்தாலோசனை செய்திட வேண்டும் என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசியமேடை கோரியுள்ளது.

இதுதொடர்பாக அதன் பொதுச் செயலாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு, ஊனமுற்றோர் சம்பந்தப்பட்டஇந்திய மறுவாழ்வுக் கவுன்சில் சட்டத்தில் முன்மொழிந்துள்ள சில திருத்தங்கள் தொடர்பாக தன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொள்கிறது. 1992இல் இயற்றப்பட்ட இச்சட்டம், மறுவாழ்வு சம்பந்தப்பட்ட ஊழியர்களின் பணிகளைமுறைப்படுத்திடவும், மேற்பார்வை செய்திடவும் கொண்டுவரப்பட்டதாகும்.இதன் அடிப்படைக் குறிக்கோள், 2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான சட்டத்துடன் உகந்தமுறையில் இணைந்து செயல்படவைப்பதற்கு ஏற்றவிதத்தில் இருக்க வேண்டுமானால், இந்திய ஊனமுற்றோர் உரிமைகளுக் கான சட்டத்தை செயல்படுத்தக்கூடிய சமயத்தில்எழும் எண்ணற்ற பிரச்சனைகளை முழுமையாகஅணுகக்கூடிய விதத்தில், இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் சட்டத்தின் கீழான நிர்வாகத்தையும், செயல்பாடுகளையும் மாற்ற வேண்டும்என்பதும் அதற்கேற்ற விதத்தில்,  ஒரு மாற்று
சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுமே விவேகமானதாக இருந்திடும். மாறாக ஆங்காங்கே சிற்சில திருத்தங்களை ஏற்படுத்துவது பயனளிக்காது. இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் கடந்த பல ஆண்டுகளாகவே தலைவர் எவரும் நியமிக்கப்படாமல் இருந்து வந்திருக் கிறது என்பது  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதேவையாகும். எனவே அதன் செயல்பாடு களுக்கு எதிரான முறையீடுகள் ஏராளமாகும்.

இதில் மிகவும் அப்பட்டமாகத் தெரிவதென்னவெனில், 2020 புதிய கல்விக் கொள்கையுடன் ஒத்துப்போகக் கூடிய விதத்தில் இதன் குறிக்கோள் அமைந்திருப்பதாகும். இப்போது கொண்டுவரப்படும் முன்மொழிவு என்பது, இந்திய மறுவாழ்வுக் கவுன்சிலை நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு “தன்னிறைவு அமைப்பாக” (“self-sustaining” body), மாற்றுவது என்பதேயாகும். இதன் மூலம், இந்திய மறுவாழ்வுக் கவுன்சிலுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு விலக்கிக்கொள்ளப்படுகிறது.  மேலும் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் பலர் இதிலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவார்கள். வேறுவிதமாகச் சொல்வதென்றால், இந்திய மறுவாழ்வுக் கவுன்சிலில் தற்போதுஏற்பளிப்பு அளிக்கப்பட்டுள்ள பல்வேறு பாடப்பிரிவுகள்  அரசாங்கத்தால் நடத்தப்படுவதற்குப் பதிலாக, இனிவருங்காலங்களில் தனியார் துறையினரால் நடத்தப்படும்.

மிகவும் பிரச்சனைக்குரிய முன்மொழிவு என்பது, கவுன்சிலின் சுயாட்சித்தன்மையையே அரித்து வீழ்த்திவிட்டு, அதனை மத்திய அரசாங்கத்தின் ஒரு துணை அமைப்பாக மாற்றி யிருப்பதாகும்.அரசாங்கம், இந்திய மறுவாழ்வுக் கவுன்சில்சட்டத்தை, ஐ.நா. ஊனமுற்றோர் உரிமைகளுக்கான மாநாடுகள் மற்றும் இந்திய ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் ஆகியவற்றுடன் உகந்த முறையில் மாற்ற வேண்டும் என்றும், அதன்மூலம் தற்போது கவுன்சிலைப் பீடித்துள்ள பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்திட முன்வரவேண்டும் என்றும், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை உறுதியாகக் கருதுகிறது. தற்போது கவுன்சிலுக்கு இருந்துவரும் சுயாட்சித் தன்மையைத் தக்கவைப்பதுடன், அதன் செயல்பாடுகள் ஜனநாயகப்பூர்வமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருந்திடுவதையும் உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

அரசாங்கம் இது தொடர்பாக ஊனமுற்றோர்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளுடனும் கலந்தாலோசனைகள் மேற்கொள்ள வேண்டும்என்றும், இதனை அவசரகதியில் செய்திடக்கூடாது என்றும் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கோருகிறது. அரசாங்கத்தின் முன்மொழிவுகள் மீது, விவரமான கருத்துக்களை, ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை, சுயேச்சையாகவும், இதர அமைப்புகளுடன் சேர்ந்தும் அரசாங்கத்திற்கு விரைவில் அனுப்பப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். (ந.நி.) 

;