india

img

போராடும் விவசாயிகளைச் சுற்றி கான்கிரீட் சுவர்களை எழுப்பிவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதுதான் ஜனநாயகமா? மாநிலங்களவையில் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா தாக்கு...

புதுதில்லி:
போராடும் விவசாயிகளைச் சுற்றி கான்கிரீட் சுவர்களை எழுப்பிவிட்டு, அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது, ஒரு ஜனநாயக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து திங்களன்று பிரதமர் மோடி ஆற்றிய உரை, கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

முன்னதாக இந்த விவாதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிகாஷ்ரஞ்சன் பட்டாச்சார்யா பேசியதாவது:

தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக  குடியரசுத் தலைவர் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், “நாம் அமை தியான இயக்கத்தை மதிக்கிறோம், ஆனால் 26 ஜனவரி நிகழ்வினைக் கண்டிக்கிறோம்” என்று மட்டும் அவர் கூறியிருக்கிறார்.குடியரசுத் தலைவர் தன்னுடைய உரையில் 24ஆவது பத்தியில், “மிகவும் விரிவான அளவில் கலந்தாலோசனை மேற்கொண்ட பின்னர், நாடாளுமன்றம் மூன்று முக்கியமான விவசாய சீர்திருத்த சட்டமுன்வடிவுகளுக்கும் ஏற்பளிப்பு கொடுத்தது,” என்று கூறுகிறார்.இவர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்  பதைப்போன்று மிகவும் விரிவான அளவில் கலந்தாலோசனைகள் நடைபெற்றன என்றால், பின் ஏன், அவசரச் சட்டப் பாதையை இந்த அரசு மேற்கொண்டது? அவசரச் சட்டம் என்பது சாதாரணமாக ஓர் அவசரநிலை அல்லது மிகவும் அதீதமான சூழ்நிலை உருவாகும்போதுதான் பிரகடனம் செய்யப்படும்.குடியரசுத் தலைவர் கூறுவதுபோன்றுமிகவும் விரிவான அளவில் கலந்தாலோச னைகள் நடைபெற்றிருந்தால், இந்த
அரசாங்கம் ஏன் அவசரச் சட்ட மார்க்கத்தைப் பின்பற்றியது? இத்தகைய எளியகேள்விக்கு ஏன் இந்த அரசாங்கத்தால் பதில் சொல்ல முடியவில்லை? அவர்கள் நேரடியாகவே நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மேற்கொள்வதன் மூலமாக இந்தச் சட்டங்களை நிறைவேற்றியிருக்க முடியுமே! நீங்கள் இதனை எப்போதுநாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்தீர்கள்? அவசரச்சட்டங்களுக்கு ஏற்பளிப்பு அளிப்பதற்காகவே இவற்றைநாடாளுமன்றத்தின் முன் கொண்டு வந்தீர்கள்.

இந்தச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம், நாட்டிலுள்ள விவசாயிகள் மத்தியில் கடும் கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்தி இருக்கிறது.விவசாயிகள் விரும்புவது என்ன? அவர்களுக்கு அனைத்து விவசாய விளை பொருள்களுக்கும் உத்தரவாதமான விதத்தில் குறைந்தபட்ச  ஆதார விலை தேவை. மேலும் அவர்களுக்குத் தாங்கள்விளைவித்திடும் விவசாயப் பொருள்கள் அனைத்திற்கும் ஒரு பாதுகாப்பான கொள்முதல் அவசியமாகும். அவர்களை விளைவித்த பொருள்களைக் கொள்முதல் செய்வதும், உணவுப் பாதுகாப்புஅளிப்பதும் அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும். விவசாயிகள் விளைவித்த அபரிமிதமான உற்பத்தி குறித்து நாம் பேசிக் கொண்டிருக் கிறோம். இந்தச் சட்டங்கள் இல்லாமலேயேஇதனை அவர்களால் செய்ய முடியும்.  உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருள்களை சந்தைப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.விவசாயிகளை, வர்த்தகர்களாக மாற்ற முடியாது. நீங்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற பாதையின் காரணமாக, உண்மையில் நீங்கள் அவர்களைத்தற்கொலைக்குத் தள்ளிக்கொண்டி ருக்கிறீர்கள் என்பதே உண்மை.

நிரம்பி வழியும் பொய்கள்
அடுத்து குடியரசுத் தலைவர் உரையில் ஏகப்பட்ட புள்ளிவிவரங்கள். புள்ளிவிவரங்கள் என்பதே பெரிய பொய். புள்ளிவிவரத் தரவுகள் பல சமயங்களில் உண்மையான நிலைமையைப் பிரதிபலிக்காது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளைப் (MSMEs)பொறுத்தவரை, இதற்கான ஒதுக்கீடு மிகவும் அற்பமாகும். 6.5 கோடி அளவிலான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்பிரிவுகளுக்கு மூவாயிரம் கோடி ரூபாய்ஒதுக்கியிருப்பது என்பது அவர்களின்தேவையைச்சந்திக்கப்போதுமானதல்ல.வேலைவாய்ப்புகளை அதிக அளவில் அளிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தரத்தொழில் பிரிவுகளேயாகும்.  இதனைக் கணக்கில்கொண்டு இவற்றுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.உலகம் முழுவதும் பலரால் பாராட்டுக்களைப் பெற்ற கீதாஞ்சலியில் உள்ள பாடல் வரிகளில்,

“எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ, தலை நிமிர்ந்து இருக்கிறதோ,
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ,
எங்கே உலகம், குறுகிய குடும்பச் சுவர்களுக்குள் சிக்கி சின்னாபின்னமாக உடையாமல் இருக்கிறதோ,
எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழத்திலிருந்து வருகிறதோ,
எங்கே முழுமையாக வெற்றிகிட்டும்வரை விடாமுயற்சிகள் தொடர்கிறதோ,
எங்கே உண்மையைத்தேடிச் செல்லும் பகுத்தறிவுக் கண்ணோட்டம், பண்டையப் பழக்கமென்னும் பாலை மணலில் வழி தவறிப்போகவில்லையோ,
எங்கே மனம் மிகவும் விரிவான சிந்தனை மற்றும் செயலை நோக்கி விரிந்து பரந்து முன்னேறிக் கொண்டிருக்கிறதோ,
அத்தகைய விடுதலை பெற்ற சொர்க்க பூமியில்,
எந்தன் பிதாவே,  எந்தன் தேசம் விழித்தெழட்டும்”

என்றார்  மகாகவி ரவீந்திரநாத் தாகூர்.

அத்தகையதொரு சுதந்திரத்தை நாம் அனுபவித்திடுவோம். அரசாங்கத்திற்கு எதிராகப் பேசினார்கள் என்ற காரணத்திற்காக கைது செய்யப்படுவதுகூடாது. அறிவுஜீவிகளை ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்று கூறி சிறைக்கம்பிகளுக்குப்பின்னே அடைத்திடுவது கூடாது. இதுபோன்றதொரு சுதந்திரத்தை நாம் சிந்தித்திட வேண்டும். இந்த நாட்டை நிர்மாணிப்பவர்கள் ஒட்டுமொத்த மக்கள்தான்.அவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங் கள். அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்.வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்கள். வேளாண்குடிமக்களுடன் அமர்ந்து பேசுங்கள். போராடும் விவசாயிகளைச் சுற்றி கான்கிரீட் சுவர்களை எழுப்பிவிட்டு அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திட முடியாது. இது பேச்சுவார்த்தைக்கான வழி கிடையாது. அதுபோன்றே இது ஒரு ஜனநாயக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையும் கிடையாது. எனவே, குடியரசுத் தலைவர்உரை நாட்டின் எதார்த்த நிலைமை களைப் பிரதிபலிக்கவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இதனை என்னால் ஆதரிக்க முடியாது.இவ்வாறு பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா கூறினார். (ந.நி)

;