articles

img

ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

கீழ்வேளூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்ற போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய வேட்பாளர் நாகைமாலிக்கு டெபாசிட் தொகைகட்டுவதற்காக வெண்மணி நினைவாலயக் காப்பாளர்சேதுபதி ரூ.5000 வழங்கினார். அரசு போக்குவரத்துத்தொழிலாளர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் டெபாசிட்தொகை வழங்கினார்கள். கந்தர்வகோட்டை சிபிஎம்வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு திருச்சி பி.எச்.இ.எல்நிறுவனத் தொழிலாளர்கள் டெபாசிட் தொகை வழங்கினர்.இதுபோலவே  மார்க்சிஸ்ட் கட்சியின் மற்ற வேட்பாளர்களுக்கும் பல உழைக்கும் மக்கள் அமைப்புகள் டெபாசிட் தொகை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு டெபாசிட் தொகை வழங்குவது அடையாளப்பூர்வமானது என்றாலும் அதற்கு ஒரு அர்த்தம் உள்ளது. வெண்மணி நினைவாலயத் தோழர் வழங்கிய டெபாசிட் தொகை என்பது, வேட்பாளர் நாகைமாலி வெற்றி பெற்று விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க, வென்றெடுக்க பாடுபட வேண்டும் என்பதற்காக தான். இதைப்போலவே, தொழிலாளர்கள் மற்றும் இன்னபிற உழைக்கும் மக்களுடைய வாழ்வாதாரத்தை, வாழ்வுரிமையை பாதுகாக்க, வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பலரும் டெபாசிட் தொகை வழங்கியுள்ளனர். 

கார்ப்பரேட் கைகளில் விவசாயத்தை ஒப்படைக்கும் முயற்சி
தமிழகத்தின் மக்கள்தொகையில் சரிபாதிக்கு மேற்பட்டோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஏற்கனவே, நலிவடைந்துள்ள விவசாயம் மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். அரசு வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், எண்ணெய் எரிவாயு உற்பத்தி,உருக்கு உற்பத்தி, மின் உற்பத்தி உள்ளிட்ட மத்திய அரசின்கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதைப் போல் ஒட்டுமொத்த விவசாயத்தையும் விவசாயிகளையும் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு ஒப்படைத்திட மோடி அரசு துடிக்கிறது. மோடி அரசின் இத்தகைய விபரீதமான முடிவுகளுக்கு எடப்பாடி அரசு துணைபோகிறது.

காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமல்ல, மாநிலத்தின் மற்ற சில பகுதிகளிலும் தற்போது நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நெல்லுக்கான ஆதார விலையும் வழங்கப்படுகிறது. தேவைப்படும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கொள்முதல் நிலையங்களை திறந்திட அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் அமலானால் கொள்முதல் நிலையங்களும் இருக்காது ஆதார விலையும் கிடைக்காது. ஒப்பந்த விவசாயம் என்ற சட்டம் அமலானால் மொத்த சாகுபடியும் கார்ப்பரேட் கைகளுக்கு சென்றுவிடும். விளைபொருள் விற்பனை மற்றும் வேளாண் சந்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும். இத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்த பாஜகவையும் சட்டங்களை ஆதரிக்கும் அதிமுகவையும், இவர்களுடைய கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்பதோடு மேற்கண்ட சட்டங்களை முறியடித்திட வேண்டும் என்பது தான் தமிழகத்தில் மக்களின் எதிர்பார்ப்பு.

சிறுதொழில்களின் பேரழிவு
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுக்கும் மத்திய அரசு சிறு குறு நிறுவனங்களை அழிக்க நினைக்கிறது. தமிழகத்தில் சுமார் 23 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களில் சுமார் ஒன்றரை கோடி பேர் வேலை செய்கின்றனர். தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தொழில் துறையில் 60 சதவீதம் வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய நிறுவனங்கள் இன்று கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக மாநில சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் முன்வைத்த அறிக்கையில் ஜிஎஸ்டி வரி சட்டத்தால் 50 ஆயிரம் தொழில்கள் மூடப்பட்டு, 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக குறிப்பிட்டார். இத்தகைய சிறுதொழில் நிறுவனங்களுக்கு மாறாக, உள்நாட்டு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள்தான் இந்திய பொருளாதாரத்தின் அச்சாணி என்று மோடி அரசு கருதுகிறது. 

அதிமுக அதிகாரத்தில் இருந்த கடந்த பத்து ஆண்டுகளில் தொழிலும் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. மேலும் வருகின்ற புதிய தொழில்களும் அதிகளவில் வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய தொழில்களாக இல்லை. மாறாக மூலதனம் மிகையாகவும் வேலைவாய்ப்புகள் குறைவாகவும் உள்ள தொழில்களுக்கே மாநில அரசு அனுமதி அளிக்கிறது.மாநில அரசின் இத்தகைய கொள்கையால் “தமிழகத்தில்  தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. எடுத்துக்காட்டாக தமிழக அரசு வெளியீடான மாநில புள்ளிவிபர கையேட்டின்படி, 2016 இல் இது 17 லட்சத்து 66 ஆயிரத்து 889 ஆக இருந்தது. ஆனால் 2017 இல் 16 லட்சத்து 60 ஆயிரத்து 603 ஆக குறைந்துள்ளது.ஒருலட்சத்திற்கும் அதிகமான சரிவு ஒரே ஆண்டில் நிகழ்ந்துள்ளது” என பொருளாதார வல்லுநர் பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா சுட்டிக்காட்டியுள்ளார். 

சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப்பிறகும் கண்ணீரும் செந்நீரும் சிந்தி தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளையெல்லாம் பறித்திடும் நோக்கத்தோடு கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் 44 தொழிலாளர் நலச்சட்டத் தொகுப்புகளாக சுருக்கி  நான்கு சட்டங்களாக நிறைவேற்றியது. இத்தகைய சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். 

ஆபத்தான கல்விக்கொள்கை
மோடி அரசு உருவாக்கிய கல்விக்கொள்கையை அடிபிறழாமல் அமலாக்கிட அதிமுக அரசு திட்டமிட்டு வருகிறது.மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப்பள்ளிகளை மூடிவிட வேண்டும் என்று மத்திய அரசு, மாநிலங்களுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. மத்திய அரசின் கல்விக்கொள்கை தமிழகத்தில் அமலாக்கிடும் வகையில் மூடப்படவேண்டிய அரசுப் பள்ளிகளை மாநில அரசு பட்டியல் தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வருகிறது. பள்ளிக்கல்வியையும் உயர்கல்வியையும் தனியார்மயமாக்கிட மத்திய அரசின் கொள்கையை அப்படியே மாநில அதிமுக அரசு அமலாக்கி வருகிறது. 

உள்ளாட்சி உரிமைகள் பறிப்பு
2016 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற அதிமுக அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தவில்லை. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 ஆண்டுகள் தாமதப்படுத்திதான் தேர்தல் நடத்தியது. அதுவும் 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டு முழுவதும் தேர்தல் நடத்தாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளே இந்த அமைப்புகளை நிர்வகித்து வருகிறார்கள். மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்கின்றபோது தட்டிக்கேட்காத அதிமுக அரசு,  உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தேர்தல் நடத்தாமல் அந்த அமைப்புகளுக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமைகளை பறித்துள்ளது. 

இத்தகையச் சூழலில் நடைபெறக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணிக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் இடையிலான போட்டியாக தோற்றமளித்தாலும் இந்த தேர்தலில் உண்மையான பிரச்சனை ஜனநாயகமா? சர்வாதிகாரமா? மதச்சார்பின்மையா? வகுப்புவாதமா? ஒற்றை ஆட்சியா?கூட்டாட்சியா? மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதா? பெரு நிறுவனங்களின் லாபத்திற்கானதா? தமிழ்நாட்டின் பண்பாட்டை பாதுகாப்பதா? இந்தித் திணிப்பு, சமஸ்கிருதம் என்ற பண்பாட்டு அழிவா? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக அணியை தோற்கடிப்பதே தமிழக மக்கள் முன்னுள்ள முக்கியக் கடமையாகும்.

கட்டுரையாளர் : ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) 

;