india

img

காலத்தை வென்றவர்கள் : இராகுல் சாங்கிருத்தியாயன் பிறந்தநாள்....

இராகுல்ஜி 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ல் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆஜம்கட் மாவட்டம் , பண்டகா என்ற கிராமத்தில்  பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கேதார்நாத் என்பதாகும். 

இராகுல்ஜி ஆரம்பப்பள்ளி வரை படித்தார். ஆனால் தன் வாழ்வில் பல்வேறு மொழிகளையும் தாமாகவே கற்று பன்மொழிப் புலவராய் விளங்கினார். இவர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, இந்தியோடு, பாலி, சமஸ்கிருதம், அரபி, உருது, பாரசீகம், கன்னடம் போன்ற இந்தியாவில் பேசப்படும் மொழிகளும், சிங்களம், பிரெஞ்சு, ரஷ்ய மொழி ஆகிய பிற நாட்டு மொழிகளும் கற்றவராகத் திகழ்ந்தார். அத்தோடு புகைப்படக்கலையையும் படித்திருந்தார்.இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார். இவை முன்னர் இந்தியாவின் நாளந்தா நூலகத்தில் இருந்தவை ஆகும். ஆகவே ராகுலைப் பெருமைப்படுத்தும் வகையில் பாட்னா அருங்காட்சியகம் இப்பொருட்களைச் சிறப்புப் பிரிவொன்றில் காட்சிப்படுத்தி உள்ளது.

இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது ‘வால்கா முதல் கங்கை வரை’ எனும் வரலாற்றுப் புனைவு நூலாகும். மனித குல
வரலாற்றை நாவலாகத் தரும் இந்நூல் புகழ் வாய்ந்தது. கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல்கி.பி. 1942ல் முடிகிறது. ‘பொதுவுடமைதான் என்ன?’ ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ ‘சிந்து முதல் கங்கை வரை’ குறிப்பிடத்தக்கவை.1958 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாதெமி விருது ‘மத்திய ஆசியாவின் இதிகாசம்’ எனும் இவரது நூலிற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.  சோவியத் யூனியனின் லெனின்கிராட் பல்கலைக்கழகம் இவரை இந்திய தத்துவயியல் பேராசிரியராய் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

;