headlines

img

ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி,ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே உணவு என்றுஒரே...பல்லவியை பாடிக் கொண்டிருக்கும் பாஜகவின் பாசிசத்தை நோக்கிய நகர்வுகள் ஆர்எஸ்எஸ்பரிவாரங்களால் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கான வேலையை பாஜக தலைவர்கள், மாநில முதல்வர்கள்,மத்திய அமைச்சர்கள், பிரதமர் என எல்லோருமே நாக்பூர் தலைமைபீடத்தின் தொண்டரடிப் பொடிகளாக வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். 

பிரதமர் தனது பதவிக்குரிய பொறுப்பைத் துறந்து பட்டவர்த்தனமாக இந்துத்துவா-வுக்காக இயங்கிக் கொண்டிருப்பது நமது நாட்டின்மிக உயர்ந்த பதவிக்கும் அதன் கண்ணியத்துக்கும் இழுக்கு. நாடு முழுவதும் தனது கட்சியின் ஆட்சியே இருக்க வேண்டும்; அதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியோடுதேர்தல் ஆணையத்தையும் இவர்களின் இஷ்டப்படியே இயங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் 1975 ஆம் ஆண்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது பற்றி குறை சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்றெண்ணும் வகையில் தான் இவர்களது ஆட்சி நிர்வாகம் சர்வாதிகாரத்தை நோக்கிநகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் முக்கியத்துவம் ஒரு தேர்தல் எவ்வாறு மக்கள் பங்கேற்புடன் சுதந்திரமாக நடத்தப்படுகிறதுஎன்பதை பொறுத்தே அளவிடப்படும்; மதிப்பிடப்படும். 

ஆனால் மேற்குவங்கத்தில் இவை யாவும் தலைகீழாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை அங்கு3 கட்டத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபின்னும் அவற்றின் முடிவுகளை அறிவிப்பது போல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் இத்தனை தொகுதிகளில் வெற்றி என்று ‘டிக்ளேர்’ செய்வது போல்சொல்கிறார்கள். ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிடுவதும் அதை பற்றிபிரச்சாரம் செய்வதும் தான் நடைமுறை. இந்தியாவின் பெருமையும் பாரம்பரியமும் பல்வேறு கட்சிகள் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பதும் மத்தியஆட்சியுடன் இணைந்து செயல்படுவதும் தான்.ஆனால் இவர்களோ மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி தான் இருக்க வேண்டும் என்பதுஒற்றையாட்சி, ஒருகட்சி ஆட்சி என்பது மாநில மக்களின் விருப்பத்தை மறுதலிப்பதல்லவா?

நாட்டின் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்துவதாகவும் ஏற்புடையதாகவும் இருக்க வேண்டும். அதுதானே ஒரு கூட்டாட்சித் தன்மையின் சிறப்பு.ஆனால் எங்கள் கட்சிஆட்சிக்கு வந்தால் தான்இந்த திட்டம் நிறைவேற்றப்படும்  என்பது அவர்களை ஆட்சியில் அமர்த்தாததால் அம்மாநில மக்களுக்கு தரப்படும் தண்டனையல்லவா?அவர்களின் இத்தகைய சர்வாதிகாரப்போக்குக்கும் ஏற்கனவே அந்த மாநிலத்தை பாழாக்கிய மம்தாபானர்ஜியின் ஆட்சிக்கும் முடிவுகட்டி இடதுசாரிகள் தலைமையிலான அணியை மேற்குவங்க ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதே இதற்குச் சிறந்த தீர்வாகும். அதை அந்த மாநில மக்கள் சாதிப்பார்கள்.

;