india

img

வேளாண் சட்டங்களால் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும்... தில்லி போராட்டத்தில் பி.டில்லிபாபு எச்சரிக்கை...

புதுதில்லி;
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம்உள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.டில்லிபாபு எச்சரித்தார்.

விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தில்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பி.டில்லிபாபு பேசியதாவது:

உலக வரலாற்றில் முத்திரை பதித்த இந்தப் போராட்டம் கடந்த 8 மாத காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டக்குழுவினர் அரசுடன் பதினோரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மோடி அரசு கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. மோடி அரசின் 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள் இந்திய விவசாயத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய விவசாயிகளின் நிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து அடிமாட்டு விலைக்கு விற்பதற்கு 
மோடி தயாராகிவிட்டார். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வேளாண் உற்பத்திப்பொருட்கள் கொள்முதலை அதானி, அம்பானிக்கும், பன்னாட்டு முதலாளி களுக்கும் தாரைவார்த்துவிட்டார்.

இந்த 3 சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், உணவு உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படும். இதனால் நாடு முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த போராட்டத்தை பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் போராட்டம் என்று கூறினார் மோடி. ஆனால் இது நாடு தழுவிய போராட்டமாக மாறிவிட்டது. இந்திய நாடு முழுவதும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என மக்கள் வீதிக்கு வரத் தொடங்கி விட்டனர். இந்தியாவில் கொண்டு வரப்பட்ட இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் போராட்டம் நியாயமானது என்றும் கனடா நாட்டின் பிரதமர் நமக்கு பேராதரவு அளித்துள்ளார்.இந்த சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கௌர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக பஞ்சாப் மாநில தலைவர்கள் ,ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், உயர் அதிகாரிகளும் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த சட்டத்தை எதிர்த்து  நாட்டின் விவசாயிகள் மட்டுமல்ல, ஆதிவாசி உரிமைகளுக்கான தேசியஅமைப்பைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வன உரிமைச் சட்டம் 2006-ஐ முழுமையாக அமல்படுத்தாத மோடி அரசு, ஆதிவாசி மக்களை தங்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்ற முயற்சிசெய்கிறது. புதிய  வனச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் அதனை எதிர்த்து பேச அமைச்சர்களுக் கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதி களுக்கும் எந்த அதிகாரமும் உரிமையும் இல்லாமல் போய்விடும். இதில் உள்ள மூன்று பேர் கொண்ட கமிட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைவராக இருப்பார். ஆதிவாசி மக்களின் உரிமைகள் குறித்து அவர் மட்டுமே முடிவெடுப்பார். ஆதிவாசி மக்களை வெளியேற்றி விட்டு அந்த நிலங்களை அதானி, அம்பானி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

மேலும் ஆதிவாசி மக்கள் வசிக்கக்கூடிய மலைப் பிரதேசங்களில் உள்ள நிலக்கரி, பாக்சைட், கிரானைட் போன்ற இயற்கை வளங்களை சூறையாட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திர போராட்ட மாவீரன் பகத்சிங் பிறந்த இந்த பூமியில் நடைபெறுகின்ற இந்த மகத்தான போராட்டத்தை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பிலும், ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் சார்பிலும்வீரம்செறிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

மதுசூதனன்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மதுசூதனன் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 10,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி அதை தடுத்து நிறுத்தியது. கடந்த 4 ஆண்டுகளில் எல்பிஜி கேஸ், பெட்ரோல் உள்ளிட்டவற்றை குழாய்கள்மூலம் விளை நிலங்களில் கொண்டு செல்வதை நமது சங்கம்  போராடி தடுத்திருக்கிறது.மோடிக்கு எதிராக விவசாயிகளை பாதுகாக்க கேரளாவில் ஒரு வலுவான கட்டமைப்பு இருக்கிறது. அதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேசியக்கவி சுப்பிர மணிய பாரதி ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு கொழுத் திருப்போரை நிந்தனை செய்வோம்’ என்று கூறினார். இந்திய விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் எதிராக மோடி அரசு கொண்டு வரும் அனைத்து சட்டங்களையும் உயிரை கொடுத்தேனும் முறியடிப்போம் என்றார்.

;