india

img

சட்டமன்றம் கலைப்பு... புதுவையில் ஜனாதிபதி ஆட்சி....

புதுதில்லி:
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பின் சட்டமன்றம் கலைக்கப்படும் என்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. சில மாநிலங்களில் ஆளும்கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்கும் ஜனநாயக படுகொலையை பாஜக தலைமை செய்து வருகிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள உயர்மட்டத் தலைவர்களின் ஆசியுடன் இந்த முறையை புதுச்சேரியில் அமல்படுத்தி ஆட்சியை கவிழ்த்தது. சபாநாயகர் உட்பட ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்டனர். இதனையடுத்து, புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அங்கு முதல்வர், அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.நாராயணசாமியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,  முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்த பிறகு எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதையடுத்து சட்டமன்றத்தை முடக்கி வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

;