india

பிஎப் வட்டி மீது வரி... 1ம் பக்கத் தொடர்ச்சி...

 வைப்பு நிதி ஆணைய விபரங்களின்படி, மேற்கண்ட தொழிலாளர்களில் 5 கோடி பேர்தான் தொடர்ந்து பங்களிப்பு செலுத்தும் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். 

ஒரு தொழிலாளர் ஒரு ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறுகிற மொத்த ஊதியம் 2.5லட்சத்திற்கும் அதிகமாக செல்லுமானால் அவர் செலுத்துகிற, அவருக்காக நிறுவனம் செலுத்துகிற - மாதாந்திர ஊதியத்தின் 12 சதவீத தொகையின் மீதான வட்டி மீது வரி விதிப்பது என்பது புதிய நடைமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கெனவே ஆண்டிற்கு ரூ.5லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுபவர்கள், வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் உள்ளன. இந்நிலையில் நிதி அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகள் குழப்பத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன என்று தொழிலாளர் நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். ரூ.2.5லட்சத் திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் கிடைக்கப்பெறும் தொழிலாளர்கள் செலுத்த வேண்டிய வரி அவர்களது இபிஎப் கணக்கிலிருந்து கழிக்கப்படுமா அல்லது வழக்கம் போல வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுவதன் மூலம் பிடித்தம் செய்யப்படுமா என்பது தொடர்பான விபரங்களோ, தெளிவான வரையறையோ இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஏ.கே.பத்மநாபன்
இதுதொடர்பாக சிஐடியு அகில இந்தியத் தலைவரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரிய டிரஸ்ட்டுகளில் ஒருவராக செயல்பட்டவருமான ஏ.கே.பத்மநாபன் கூறுகையில், “நாட்டின் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து எப்படியாவது அதிகபட்சமாக செல்வத்தை உறிஞ்ச வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்றிய அரசு விதிகளில் மாற்றம் செய்கிறது. தொழில் உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், வேலையின்மையும் வருமான இழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், பிஎப் நிதிக்கு அரசு வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்துக் கொண்டிருக்கின்றது என்பதுமட்டுமல்ல; அந்த வட்டியின் மீது வரி விதித்து அதன்வரம்பை விரிவாக்குவது என்பதில் முனைப்பாக உள்ளது. இந்தப் பிரச்சனையில் இன்னும்அரசு விதிகளை தெளிவாக்கவேண்டியது அவசியம். தொழிலாளர்களின் பணம் பறிபோகாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.

;