india

img

இந்திய அரசின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் பிரிட்டன் நிறுவனம்..? 1.4 பில்லியன் டாலர் இழப்பீட்டைத் தராததால் நடவடிக்கையில் இறங்குகிறது கெய்ர்ன் எனர்ஜி..

புதுதில்லி:
இந்திய அரசு தனக்கு வழங்க வேண்டிய 1.4 பில்லியன் டாலர் (சுமார் 10 ஆயிரம் கோடி) இழப்பீட்டுத் தொகைக்கு ஈடாக, வெளிநாட்டிலுள்ள இந்தியாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ‘கெய்ர்ன் எனர்ஜி’ என்ற எண்ணெய் நிறுவனம் இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது மோடி அரசுக்கும், அதன் அதிகாரிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2006-07ம் ஆண்டு பிரி்ட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தன்னுடைய பங்குகளை இந்தியாவில் உள்ள கெய்ர்ன் நிறுவனத்துக்கு மாற்றியது. ஆனால், இவ்வாறு பங்குகளை மாற்றிய வகையில், கெய்ர்ன் இந்தியா நிறுவனம், முதலீட்டு ஆதாயம் அடைந்துள்ளதாக கூறி அந்த நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரத்து 247 கோடி வரி விதித்து, இந்திய வருமானவரித்துறை உத்தரவிட்டது. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தில்லி உயர் நீதிமன்றம் ஆகியவையும் இந்த வரி விதிப்பை உறுதிப்படுத்தின.இதையடுத்து, கடந்த 2011-ஆம் ஆண்டு கெய்ர்ன் நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது பெரும்பான்மையான பங்குகள் மற்றும் வர்த்தகத்தை வேதாந்தா நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. இதிலும், கெய்ர்ன் நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை விற்பனை செய்யவருமானவரித்துறை அனுமதிக்கவில்லை. மேலும்,கெய்ர்ன் இந்தியாவின் பங்குகள், அதன் ஈவுத்தொகை யை முடக்கி வைத்தது.

இதையடுத்து கெய்ர்ன் நிறுவனம், இந்திய அரசின் செயலை எதிர்த்து, ‘தி ஹேக்’ நகரில் உள்ள சர்வதேசதீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கில், கடந்த டிசம்பரில்சுமார் 582 பக்கம் கொண்ட தீர்ப்பை, கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக தீர்ப்பாயம் வழங்கியது. இந்தியா, சம்பந்தப்பட்ட கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கான இழப்பீட்டை வட்டியுடன் சேர்த்து சுமார் 1.4 பில்லியன் டாலராக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில்தான் கெய்ர்ன் எனர்ஜி தற்போது சர்வதேச தீர்ப்பாயம் அறிவித்த 1.4 பில்லியன் டாலர் தொகைக்கு ஈடான இந்திய அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டுச் சொத்துக்களைக் கைப்பற்றப் போவதாக மிரட்டலில் இறங்கியுள்ளது. 

இது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அரசு சொத்துக்களை ஒரு நிறுவனம் கைப்பற்ற முடியுமா? என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.அமெரிக்கா எண்ணெய் நிறுவனமான கோனோகோ பிலிப்ஸ் (ConocoPhillips) மற்றும் வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ (PDVSA) இடையிலான வழக்கில் கோனோகோ பிலிப்ஸ் வெற்றிபெற்றது. 2 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிடிவிஎஸ்ஏ நிறுவனத்திற்கு 2019-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் வெனிசுலா அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை கோனோகோ பிலிப்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. பின்னர் பிடிவிஎஸ்ஏ நிறுவனம் அமெரிக்க நிறுவனத்திற்கு உரிய தொகையைக் கொடுத்தது. இதேபோல் 10 ஆயிரத்து 427 கோடி ரூபாய் மதிப்பிலான வரி நிலுவை தொடர்பாக, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் மீது இந்திய அரசு தொடுத்த வழக்கில், தீர்ப்பு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு சாதகமாகவே வந்துள்ளதால், அந்த நிறுவனம் தனக்கு கிடைக்க வேண்டிய 1.4 பில்லியன் டாலர் அளவிலான தொகையை விரைவில் அளிக்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தும், இல்லையெனில் வெளிநாட்டில் இருக்கும் இந்திய வங்கிக் கணக்குகளையும், விமானங்கள், இதர வெளிநாட்டுச் சொத்துக்களை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கும் எனத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்துவிட்டது. எங்களது நிறுவன முதலீட்டாளர்கள் இந்தத் தீர்ப்புக்கான தீர்மானத்தை விரைந்து நிறைவேற்ற விரும்புவது பற்றி, லண்டனில் இருக்கும் இந்திய ஹை-கமிஷனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பிரதமர் அலுவலகம் மற்றும் நிதியியல் மற்றும் வெளியுறவு துறை அமைச்சகத்திற்கும் கடிதங்களையும் அனுப்பி யுள்ளோம். சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பை, இந்தியா நிறைவேற்றாத நிலையில் கெய்ர்ன் தற்போது கண்டுபிடித்துள்ள இந்திய அரசு சொத்துக்களைக் கைப்பற்றும்” என்று தெரிவித்துள்ளது.

;