india

img

விவசாயிகள் எழுச்சியின் 25-வது நாள்... 33 தியாகிகளுக்கு நாடு முழுவதும் உணர்ச்சிமிகு அஞ்சலி

புதுதில்லி/சென்னை:
வேளாண் சட்டங்களையும், மின்சாரச் சட்டத்தையும் ரத்து செய்யவலியுறுத்தி இந்திய விவசாயிகள் எழுச்சி டிசம்பர் 20 ஞாயிறன்று 25வதுநாளை எட்டியது. இந்த 25 நாள் போராட்டத்தில், கோடிக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள நிலையில், வயது மூப்பு மற்றும் கடுங்குளிர் காரணமாக 33 விவசாயிகள் தமது இன்னுயிரை இழந்துள்ளனர். விவசாயிகள் எழுச்சியின் இந்த மகத்தானதியாகிகளுக்கு தேசிய அளவில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிறன்று நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான மையங்களில் நடை பெற்றது.

தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அகிலஇந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விவசாயத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. நாகப்பட்டினம் மாவட்டம் சாட்டியக்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார். அப்போது, 25 நாட்களாக தில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் விவசாயிகளின் எழுச்சி இந்திய வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும்  குறைந்த பட்ச ஆதார விலை, மண்டி (சந்தைகள்) அமைப்புகளை ஒழித்துக்கட்டும் வகையிலும் வேளாண் சட்டங்கள் உள்ளதாக விவசாயிகள் கொந்தளிப்புடன் தெரிவிக்கின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  இதுவரை நடத்திய பல பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளை  மத்திய அரசு ஏற்க மறுத்து பிடிவாதத்துடன் உள்ளது. மத்திய அமைச்சர் கள் சிலர் விவசாயிகளின் போராட்டத் தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். 
இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக பெ.சண்முகம் கூறினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் ஹன்னன் முல்லா, அசோக் தாவ்லே, பி.கிருஷ்ணபிரசாத், விஜு கிருஷ்ணன், கே.கே.ராகேஷ் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மகாராஷ்டிர விவசாயிகள் புறப்படுகின்றனர்
இதனிடையே தில்லியில் முற்றுகையிட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்துகொள்வதற்காக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் மகாராஷ்டிர விவசாயிகள் திங்களன்று தில்லி நோக்கிபுறப்படுகிறார்கள். பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் செங்கொடி ஏந்தி, வாகனப்பேரணியாக நாசிக் மாநகரில் இருந்து தில்லி நோக்கிப் பயணம் செல்ல இருப்பதாகவும் வழி நெடுகிலும் மிகப்பெரும் வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளில் ஆங்காங்கே உள்ள விவசாயிகள் ஈடுபட்டிருப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிர மாநிலக்குழு தெரிவித்துள்ளது. இதேபோல, மத்தியப்பிரதேசத்திலிருந்தும், இராஜஸ்தானிலிருந்தும் மேலும் விவசாயிகள் தில்லி நோக்கி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் புறப்படுகிறார்கள்.
 

;