india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்...

காங்கிரஸ் வார்டுகளை கைப்பற்றிய ஓவைசி!

குஜராத் மாநிலத்தில், 576 மாநகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் பாஜக மட்டும் 483 வார்டுகளை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 55 வார்டுகள் மட்டுமே கிடைத்தன. ஆம் ஆத்மி 27 வார்டுகளிலும், அசாதுதீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி 7 வார்டுகளையும் பிடித்தன. இதில், அகமதாபாத் மாநகராட்சியில் இந்த முறை மஜ்லிஸ் கட்சி வெற்றிபெற்ற 7 வார்டுகளுமே, கடந்த முறை காங்கிரஸ் வசம் இருந்தவை என்பது தெரியவந்துஉள்ளது. அதேபோல சூரத் மாநகராட்சியில் ஆம் ஆத்மி 27 வார்டுகளை கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு இங்கு ஒரு வார்டு கூட கிடைக்கவில்லை.

                                              *********************

நரேந்திர மோடி அரசு கூறும் காரணத்தில் நியாயமில்லை!

“மக்கள் ஏற்கெனவே கொரோனா, வேலையின்மை, பணவீக்கப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையில், தொடர்ச்சியாக, தேவையில்லாமல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது முற்றிலும் தவறானது” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மேலும், “பொதுநல பணிகளுக்கான நிதியாதாரத்தை திரட்டவே வரியைக் கூட்டுவதாக மோடி அரசு கூறும் காரணம் நியாயம் இல்லாதது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

                                              *********************

ராகுல் காந்தி பிளவுவாத அரசியல் செய்கிறார்..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிளவுவாத அரசியல் செய்வதாக, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கஜேந்திர சிங் செகாவத் உள்ளிட்டோர் கொதித்தெழுந்துள்ளனர். ராகுல் காந்தி வடமாநில மக்கள், தென்மாநில மக்கள் என்று பிரித்துப் பேசுவதாகவும், அவர் எப்போதும் இந்தியர்களை மேலோட்டமாகத்தான் காண்பார் என்றும், இந்தியர்களைப் புரிந்துகொள்ள ராகுல் காந்தி முதலில் இந்தியனாக இருக்க வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

                                              *********************

ஒட்டகத்தில் சவாரி செய்த முன்னாள் காங். எம்.பி.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்ததால், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருந்தார். பெட்ரோல் - டீசலுக்கு வரி மட்டும் 60 ரூபாய் அளவிற்கு வசூலிக்கப்படுவதை மறைத்து, இவ்வாறு கூறியிருந்தார். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஜி.வி. ஹர்ஷா குமார், ராஜமுந்திரியில் உள்ள ராஜீவ் காந்தி கல்வி நிறுவனத்திற்கு ஒட்டகத்தில் சவாரி செய்துள்ளார். 

                                              *********************

ரஞ்சன் கோகோய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

நீதித்துறை மோசமாகி வருகிறது. நீதிமன்றத்துக்குச் சென்றால் நீதி கிடைக்காது எனும்போது யார் நீதிமன்றத்திற்கு செல்வார்கள்? என்றெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போது பாஜக தயவில் மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவருமான ரஞ்சன் கோகோய் பேசியிருந்தார். இந்நிலையில், கோகோயின் இந்தப் பேச்சு நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்பதால், அவர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலுக்கு சமூக ஆர்வலர் சாஹேத் கோகலே ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

;