india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

சிலைகள், நினைவிடங்கள் கட்ட மாட்டோம்!”

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால், தலைவர் களுக்கு சிலைகள், நினைவிடங்கள் அமைக்க மாட்டோம் என, பகுஜன்சமாஜ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார். கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது, மாயாவதி எழுப்பிய நினைவிடங்கள், சிலைகளால் குறிப்பிட்ட பிரிவினர் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையிலேயே பிராமணர் உள்ளிட்ட பிரிவினரின் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த புதிய அறிவிப்பை மாயாவதி வெளியிட்டுள்ளார்.

                                    **************

தேஜஸ்வியை சந்தித்த சிராக் பஸ்வான்!

ராஷ்ட்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், பீகார்எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வியை, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக்பஸ்வான் சந்தித்துப் பேசியுள்ளார். பாஜகமற்றும் தனது சொந்த சித்தப்பா பசுபதிகுமார் பரஸ் ஆகியோரால் ஏமாற்றப்பட்ட சிராக் பஸ்வான், தேஜஸ்வியை சந்தித்ததுமுக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனினும், ராம்விலாஸ் பஸ்வானின்நினைவுநாளில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கவே, தேஜஸ்வியை சந்தித்ததாக சிராக் கூறியுள்ளார். 

                                    **************

பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயார்

‘‘ஜம்மு - காஷ்மீரின் மாநில மற்றும் சிறப்பு அந்தஸ்துகளை மீட்டெடுக்க தேசிய மாநாட்டுக் கட்சி உறுதிபூண்டுள்ளது. அதேவேளையில் இங்கு பேரவைத் தோ்தல் எப்போதுநடத்தப்பட்டாலும் அதில் தேசிய மாநாட்டுக் கட்சி போட்டியிடும்’’ என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். ‘‘ஆப்கானிஸ் தானை தலிபான்கள் பாதுகாக்க வேண் டும். அனைத்து நாடுகளுடனும் அவா்கள் நல்லுறவைப் பேண வேண்டும்” என்றும்பரூக் அப்துல்லா விருப்பம் தெரிவித்துள் ளார்.

                                    **************

ஆர்எஸ்எஸ் விவசாயிகள் பிரிவு ஆர்ப்பாட்டம்

வேளாண் விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில், புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்றுஆர்எஸ்எஸ் விவசாயிகள் பிரிவான ‘பிகேஎஸ்’ அமைப்பினர், நாக்பூரில் புதன்கிழமையன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று வேளாண்சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்தோ அல்லது புதிய சட்டத்தை இயற்றியோ ஒன்றிய அரசு தங்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று பிகேஎஸ் விதர்பாபிரிவின் தலைவா் நானா ஆக்ரே பேசியுள்ளார்.

                                    **************

2,300-க்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவு ரத்து?

2021 மார்ச் மாத நிலவரப்படி, நாடு முழுவதும் 8 தேசிய கட்சிகள், 53 மாநில கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத 2,638 கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இவற்றில் 400-க்கும் குறைவான கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளன. அதிலும் 200 கட்சிகள்தான் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பெயரளவில் ஆவணங்களில் மட்டுமே உள்ள 2,300-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

;