india

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்....

'டீ' மான நஷ்ட வழக்கு போடத் தயாரா?

இந்திய தேயிலை குறித்து அவதூறு செய்வதற்காக நாட்டிற்கு வெளியே ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று பிரதமர் மோடி, அசாமில் பேசியிருந்தார். இதற்கு மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். "இந்திய டீயை ஒருவர் எப்படி மதிப்பிழக்க வைக்க முடியும்? அடையாளம் தெரியாத அந்த நபர்கள் மீது மோடி அரசு 'டீ' மான நஷ்ட வழக்கு போடுமா?"என்று கேட்டுள்ளார்.

                                                   ******************

ஆன்லைன் வழிக் கல்வி  எல்லோருக்கும் கிடைத்தது!

மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரண‘மாக, கொரோனா தொற்றின்போது நாட்டில் எந்தக் குழந்தைக்கும் ஆன்லைன் வழி கல்வி கிடைக்காமல் போகவில்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். உயர்கல்விக்கு என 22, பள்ளிக்கல்விக்கு என 12 ஆக மொத்தம் 34 கல்வி தொலைக்காட்சி சேனல்கள் இயங்குகின்றன; கல்வி, எல்லா இடத்தையும் அடைந்தது என்று தனக்குத்தானே கைதட்டிப் பாராட்டிக் கொண்டுள்ளார்.

                                                   ******************

எதையும் தெரியாமல் அமித்ஷா பேசக் கூடாது..!

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பழிவாங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்று என்சிபி தலைவரும், மகாராஷ்டிர துணைமுதல்வருமான அஜித் பவார் விமர்சித்துள்ளார். "உண்மையென தெரிந்தால் மட்டுமே ஒருவர் அதைப்பற்றி பேச வேண்டும்" என்று கூறியிருக்கும் அஜித் பவார், "நாங்களே பெரும்பாலானோர் சர்க்கரை ஆலைகளுடன் தொடர்பு உள்ளவர்கள் எனும்போது, நாங்களாகவே எப்படி, எங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்திக் கொள்வோம்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

                                                   ******************

இணையத்தை முடக்குவது நாட்டிற்கே அவமானம்..!

"எப்போதெல்லாம் மக்கள் போராட்டம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் அரசாங்கம் இணையசேவையை தன்னிச்சையாக இடைநீக்கம் செய்துவிடுகிறது. தற்போது மத்தியில் ஆளும் அரசாங்கம் உலகிலேயே அதிக அளவில் இணையத் தடையில் ஈடுபட்டுள்ள சாதனையை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளது. இது ஒரு அவமானகரமான சாதனை ஆகும்" என்று அரசியல் செயற்பாட்டாளரும் கட்டுரையாளருமான பூனாவாலா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

                                                   ******************

நடிகை கங்கனா மீது  போலீசில் புகார்..!

பாஜக ஆதரவு பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார். அண்மையில், விவசாயிகளை பயங்கரவாதிகள், காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று டுவிட்டரில் அவதூறு பரப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், விவசாயிகளை அவமதித்த கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடகமாநிலம் பெலகாவியை சேர்ந்த வழக்கறிஞர் ஹர்ஷவர்த்தன், அங்குள்ள திலக்வாடி காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார்.

;