india

img

உணவுப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுக... கேரள சட்டமன்றம் தீர்மானம்... பாஜகவும் ஆதரிக்க, ஏகமனதாக நிறைவேறியது....

திருவனந்தபுரம்:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் கேரள  சட்டப்பேரவையில்  ஏகமனதாக நிறைவேறியது. சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வில் முதல்வர்பினராயி விஜயன் முன்மொழிந்த தீர்மானத்திற்கு யுடிஎப் உறுப்பினர்களும், பாஜகவின் ஒரே உறுப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

முதல்வர் பினராயி விஜயன்  தீர்மானத்தை அறிமுகப்படுத்தி பேசுகையில்,  இந்த சட்டங்கள் உணவு பாதுகாப்புக்கு ஆபத்து என்பதால் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார். விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால் அது கேரளாவை கடுமையாக பாதிக்கும்என்று தீர்மானம் சுட்டிக்காட்டியது. மத்திய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட  திருத்தம் கார்ப்பரேட்டுகளுக்கானது என்றும், புதிய சட்டம் விவசாயிகளுக்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயம் என்றும் முதல்வர் கூறினார். இந்தத்திருத்தம் விவசாயத்தில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு முன்னால் விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை இந்த சட்டம் நீக்குகிறது. விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதிலிருந்து மத்திய அரசு விலகுவது தொலைநோக்கில் விளைவுகளை ஏற்படுத்தும் என்று முதல்வர் கூறினார்.வேளாண் துறை ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மூன்று புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றியுள்ளது, இது விவசாயத் துறையில் கடும்தாக்கத்தை ஏற்படுத்தும். இதன்விளைவாக, உணவு தானியங்களுக் கான தற்போதைய ஆதரவு விலைகூட கிடைக்காது என்று விவசாயிகள் கவலைப்படுகிறார்கள்.

இங்குள்ள   கடுமையான பிரச்சனை என்னவென்றால், கார்ப்பரேட்டுகளின் அதிகாரத்தை எதிர்கொள்வதில் விவசாயிகளின் பேரம் பேசும் சக்தி பெரும்பாலும் மிகவும் பலவீனமாக உள்ளது. விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை  இச்சட்டம் வழங்கவில்லை. அது மட்டுமல்லாமல், இதற்காக கார்ப்பரேட்டுகளுடன் சட்டப் போரை நடத்தும் திறன் விவசாயிகளுக்கு இல்லை. விவசாய விளைபொருட்களை மத்திய அரசே கொள்முதல் செய்வதற்கும், தேவைப்படுபவர்களுக்கு நியாயமான விலையில் விநியோகிப்பதற்கும் ஒரு முறை இருக்க வேண்டும். மாறாக, விவசாய உற்பத்தி பொருட்களின் வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் கையகப்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்குவதற்கான பொறுப்பி லிருந்தும் மத்திய அரசு விலகிச் செல்கிறது.

அதே நேரத்தில், உணவுப்பாதுகாப்பு என்பது மிக முக்கியமான பிரச்சனை.கையிருப்பு மற்றும் விநியோகத்தி லிருந்து அரசாங்கம் விலகும்போது, பதுக்கலும் கறுப்புச் சந்தையும் அதிகரிக்கும். உணவுப்பொருள் வழங்கலும் அதன் மூலமான உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் விதிகளிலிருந்து உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விலக்குவது நிலைமையை மோசமாக்கும் என முதல்வர் சுட்டிக்காட்டினார்.
சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்கள் கே.சி.ஜோசப், இ.சந்திர சேகரன், டி.ஏ.அஹ்மத் கபீர், மேத்யூ டி தாமஸ், பி.ஜே.ஜோசப், கணேஷ் குமார், பி. சி.ஜார்ஜ், மாணி சி கப்பன், அனூப் ஜேக்கப்,ஓ ராஜகோபால், கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டனர்.

;