india

img

கேரளத்தில் மூன்றாவது அலையை தடுக்க போர்க்கால நடவடிக்கை : முதல்வர் அறிவிப்பு....

திருவனந்தபுரம்:
கோவிட் மூன்றாவது அலையைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நோய் பரவல் தொடரும் நிலை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது, என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேலும் கூறியதாவது: 

மரணத்தைத் தடுப்பதும் தடுப்பூசியை விரைவில் முடிப்பதும் முக்கியம். மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பொய் பிரச்சாரங்கள் மூலம் கவலையை உருவாக்கும்முயற்சி நடக்கிறது. ஆனால் அரசாங்கம்எடுத்த நடவடிக்கைகளின் அனுபவம் மக்கள் முன் உள்ளது.கேரளாவின் நடவடிக்கைகள், சுகாதார நிபுணர்கள் உட்பட பலரின் பாராட்டை பெற்றுள்ளது. தடுப்பூசி வேகமாக முன்னேறுவதால் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை விரைவில் எட்ட முடியும் என்று   நம்பப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையில் அதிக தடுப்பூசிபோடப்பட்ட மாநிலம் கேரளம் என்று முதல்வர் கூறினார்.

வலுப்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கை
மக்கள்தொகை விகிதத்தில் ஏழுக்கும்அதிகமாக தொற்று உள்ள பகுதிகள் மூடப்படும். செப்டம்பர் ஒன்றாம் தேதி  நிலைமையை மதிப்பீடு செய்ய நிபுணர் கூட்டம் நடத்தப்படும். செப்டம்பர் 3 ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் நடக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக மாவட்டங்களில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று (ஆக.30) அவர்கள் பொறுப்பேற்கிறார்கள்.மாவட்டத்தில் கூடுதல் எஸ்பிக்கள் கோவிட் கட்டுப்பாட்டுக்கான நோடல் அதிகாரிகளாக இருப்பார்கள். வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கூட்டம் மீண்டும் நடைபெறும். தொடர்புடைய நோய்கள் மற்றும் வயதானவர்களுக்கு கோவிட் தொற்றுக்கான மிக விரைவான சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.கோவிட் இரண்டாவது அலை வலுவாகஇருந்தபோதிலும், கேரளா மருத்துவ முறையை வலுப்படுத்தி, இறப்பு எண்ணிக்கையை சிறந்த முறையில் குறைக்க முடிந்தது. ஆக்சிஜன் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் நோயாளிகளுடன் அலையும் அவலம் இங்கு யாருக்கும் ஏற்படவில்லை. கேரளாவில், சுடுகாட்டிற்கு முன் மக்கள் அன்புக்குரியவர்களின் உடல்களுடன் வரிசையில் நிற்பதை காண முடியவில்லை. சடலங்களை இறுதி நிகழ்ச்சிகள் நிறைவேற்றாமல் ஆறுகளில் வீசும் பழக்கம் இங்கு யாருக்கும் இருந்ததில்லை. எவ்வளவு தவறான தகவல்கள் பரப்பப்பட்டாலும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது. அதுதான் இந்த நாட்டின் அனுபவம். இது மக்கள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின் விளைவு என்று முதல்வர் கூறினார்.

திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு
கேரளத்தில் திங்கள் முதல் (ஆக.30) இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார் முதல்வர்.

;