india

img

ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியதாம் - கல்வியை காவி மயமாக்க துடிக்கும் ஹரியானா அரசு

ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 9 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பும், அதன் நிறுவனர்களும் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியதாக கூறப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா மாநில பள்ளிக்கல்வி வாரியம் புதுப்பித்துள்ள 9 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனரான ஹெட்கோவர் ஒரு சிறந்த தேசபக்தர் என்றும், சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சாவர்க்கர் முக்கியமான சுதந்திரப் போராட்ட வீரர் என்றும், அவர் இந்துத்துவாவின் தீவிர ஆதரவாளர் மற்றும் இந்தியப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தவர் என்று இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிகார பேராசை தான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணம். 1940களில் காங்கிரஸ் தலைவர்கள் செயலிழந்து போனார்கள். அதற்கு மேல் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர விரும்பவில்லை. சில காங்கிரஸ் தலைவர்கள் எந்த விலை கொடுத்தாலும் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையில் கூடிய விரைவில் சுதந்திரத்தைப் பெற விரும்பினர் என்று இப்புத்தகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், முகமது அலி ஜின்னாவிற்கு கிடைத்த முக்கியத்துவம் காரணமாக அவர் அதிக அதிகாரம் பெற்றார். இதனால் ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களால் இந்நாடு பலவீனமடைந்தது. எனவே இந்தியா பாகிஸ்தான் பிரிவினைதான் இந்நாட்டில் அமைதியை மீட்டெடுக்க ஒரே வழி என  காங்கிரஸ் நம்பியதாக இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், 1911 ஆம் ஆண்டு அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் மொத்தம் ஆறு மன்னிப்புக் கடிதங்களைப் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதியிருக்கிறார் என வரலாற்று ஆய்வாளர்கள் பலர் ஆதாரங்களுடன் கூறுகின்றன. இந்நிலையில் தான் சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரர் என்றும், சாதி மற்றும் தீண்டாமைக்கு எதிரானது ஆர்எஸ்எஸ் அமைப்பு என்றும் உண்மைக்குப் புறம்பாக வரலாற்றைத் திரித்து, கல்வியைக் காவிமயமாக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது பாஜக ஆட்சியில் இருக்கும் ஹரியானா அரசு.

;