india

img

இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு - கணக்கெடுப்பில் தகவல்!

4 வருடங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் சிறுத்தைகள் கணக்கெடுப்பின் அறிக்கையில், இந்தியாவில் இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை தற்போது 13,874 ஆக அதிகரித்துள்ளது என வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐந்தாவது முறையாக நடத்தப்பட்ட சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்த கணக்கீடு 2012-இல் தொடங்கப்பட்டு அதன் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தில்லியில் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், இந்தியாவில் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை 13,874-ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்குகள் நிறுவனம், மாநில வனத்துறைகளுடன் இணைந்து சிறுத்தைகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது.

இதற்காக, சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதி, சிவாலிக் மலைகள், வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், மகாராஷ்டிராவில் 1,985 சிறுத்தைகளும், கர்நாடகாவில் 1,879 சிறுத்தைகளும், தமிழ்நாட்டில் 1,070  சிறுத்தைகளும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறுத்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை கடந்த 2018-ஆம் ஆண்டில் 12,852 ஆக இருந்தது 2022-இல் 13,874 ஆக அதிகரித்துள்ளது எனத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் தற்போது 3,907 சிறுத்தைகள் உள்ளன, மேலும் 2018 ஆம் ஆண்டிலிருந்து சிறுத்தைகளின் எண்ணிக்கை 2022-இல் 12% அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 2018 இல் 1,690 ஆக இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 2022 இல் 1,985 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக 14% சிறுத்தைகள் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. 

மகாராஷ்டிரா, மத்திய இந்தியா மற்றும் இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த எண்ணிக்கையான 1,985 சிறுத்தைகளில், மேல்காட் புலிகள் காப்பகத்தில் 233, தடோபாவில் 148, நவேகானில் 140, சஹ்யாத்ரியில் 135, மற்றும் பென்ச்சில் 102 சிறுத்தைகள் உள்ளன.

“நாகார்ஜுனாசாகர் ஸ்ரீசைலம், பன்னா, சரிஸ்கா, சத்புரா, மேல்காட் மற்றும் கன்ஹா புலிகள் காப்பகங்களில் பகுதி வாரியாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

வெளியே பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விடப் புலிகள் காப்பகங்களில் சிறுத்தையின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
இந்த கணக்கெடுப்பை மேற்கொண்ட இந்திய வனவிலங்கு கழகத்தின் (WII) இயக்குனர் வீரேந்திர திவாரி, இந்த கணக்கெடுப்பு தேசிய புலி மதிப்பீட்டின் அறிக்கை என்று கூறினார்.

“இந்த கணக்கெடுப்பு புலிகள் மற்றும் சிறுத்தைகள் இரண்டும் உள்ள பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது, இது சிறுத்தைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட மொத்த பகுதிகளில் 70% ஆகும். 

இந்த கணக்கெடுப்பில் பல பகுதிகள் மதிப்பீடு செய்யப்படவில்லை, உதாரணமாக, சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அல்லது ஹரியானாவில் சிறுத்தைகள் மட்டுமே உள்ள பகுதிகள். எனவே, இந்த இடங்களையும் சேர்த்தால், ஒட்டுமொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை மேலும் உயரும்,” என்று திவாரி கூறினார்.

உத்தரகாண்ட, கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் கோவா உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை காட்டுகிறது. “மகாராஷ்டிராவில், மாநில அரசு வனத்துறையுடன் இணைந்து வேட்டையாடுதல் தொடர்பான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடிந்ததாலும், வனப்பகுதிக்கு அருகாமையில் வசிக்கும் மக்களுக்குக் கல்வியறிவிப்பதன் மூலம் மனிதன் - விலங்கு மோதல்களைக் கட்டுப்படுத்தவும் முடிந்ததால் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

மும்பையின் வனவிலங்கு காப்பாளரும், ரெஸ்கிங்க் அசோசியேஷன் ஃபார் வைல்டு லைஃப் வெல்ஃபேர் (RAWW) நிறுவனருமான பவன் சர்மா கூறுகையில், சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், எதிர்காலத்தில் மனிதர்கள்-விலங்குகள் அதிக அளவில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. 

"மக்கள்தொகை அதிகரித்து வருவதால், சிறுத்தையைப் பார்ப்பது போன்ற மனித-விலங்கு தொடர்புகளின் சாத்தியக்கூறுகள் ஓரளவிற்கு அதிகரிக்கலாம். எனவே, இந்த தொடர்புகள் மனித-விலங்கு மோதல்களாக மாறாமல் இருக்க அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்,”என்று சர்மா கூறினார்.
 

;