india

img

நீட் முதுகலை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்: இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை    

மே 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நீட் முதுகலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.    

இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17 ஆம் தேதியும், முதுகலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வு மே 21 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  

இந்நிலையில் நீட் முதுகலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் புதன்கிழமை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.    

அதில் கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தோ்வு தாமதமாகவே நடைபெற்றது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட வேண்டிய முதுகலை கலந்தாய்வு, மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் ஜனவரி மாதம் தான் தொடங்கப்பட்டது.  

மேலும் அகில இந்திய மற்றும் மாநில அளவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகும், காலியிடங்களை நிரப்புவதற்காக விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, வழக்கமாக ஏப்ரல் மாதம் நடைபெறும் நீட் முதுகலைத் தேர்வு மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தற்போது வரை முடியவில்லை. இன்னும், பல மாநிலங்கள் தங்களுக்கான கலந்தாய்வை முடிக்க வில்லை.    

எனவே, 2021  மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவடைதற்கும், 2022 நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கும் இடையே மிகவும் குறுகிய காலமே உள்ளது.        

மேலும், கடந்தாண்டு  ஏற்பட்ட கொரோனா அலை காரணமாக, தொலை மருத்துவ சேவை மற்றும் லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு‌ சிகிச்சை அளிக்கும் பணியில், இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் லட்சக்கணக்கான  மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 2022 நீட் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க கொரோனா சிகிச்சை பணி கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா சிகிச்சை பணி காரணமாக இறுதி ஆண்டுத் தேர்வை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தாண்டு நீட் முதுகலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆகின்றனர்.    

எனவே, மாணவர்களின் நலன் கருதி, அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து  சில மாத காலம் கழித்தே தேர்வு நடைபெற வேண்டும் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.      

இதனிடையே நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி எம்பிபிஎஸ் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை 13 ஆம் தேதி விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.