india

img

இந்துத்துவவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஃபேஸ்புக்-ஆதாரங்களை வெளியிட்டு அம்பலப்படுத்திய புலம்பெயர் இந்தியர்கள்

டிசம்பர் 10, 2021 அன்று, நெதர்லாந்தில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் தலைமையிலான இலாப நோக்கற்ற உரிமைகள் அறக்கட்டளையான தி லண்டன் ஸ்டோரியின் ஆர்வலர்கள், இந்தியாவில் உள்ள தீவிர வலதுசாரி இந்துத்துவா தலைவர்களின் இடைவிடாத வெறுப்பு பேச்சுக்களின் மீது கவனத்தை ஈர்ப்பதற்காக ஹேக்கில் உள்ள அமைதி அரண்மனை சுவரில் (Wall Of Peace Palace) புதிதாக நியமிக்கப்பட்ட ஜூனா அகாராவின் சர்ச்சைக்குரிய மகாமண்டலேஷ்வரான யதி நரசிங்கானந்த் சரஸ்வதியின் வன்முறை காணொளிகளைக் காட்சிப்படுத்தினர்.

ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள காணொளியில், இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை வன்முறையை வலியுறுத்துவதைக் காண முடிந்தது. “நான் அனைத்து இஸ்லாமியர்களையும் அழித்து, பூமியிலிருந்து இஸ்லாத்தை ஒழிக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். நரசிங்கானந்தின் இந்த ஆத்திரமூட்டும் காணொளி 2019 அக்டோபரில் முகநூலில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, இது 32 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

ஹேக் நகரில் உள்ள அமைதி அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்ட காணொளியில், நரசிங்கானந்தின் சீடர் ஒருவரால் ஒரு குழந்தை தாக்கப்பட்ட காணொளியும் அடங்கும். மார்ச் 2021 இல், உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள சிவசக்தி தாம் தஸ்னா கோவிலில் 14 வயது இஸ்லாமிய சிறுவன் ‘அத்துமீறி நுழைந்ததற்காக' கொடூரமாக தாக்கப்பட்ட காணொளி அதிவிரைவாக பரவியது. பின்னர், கோயிலின் தலைமை அர்ச்சகர் நரசிங்கானந்த், சிறுவன் ஒரு 'ஜிஹாதி’ என்றும், கோயிலுக்குள் நுழைந்து சிலைகளை தீட்டுப்படுத்தவும், இந்துப் பெண்களைத் துன்புறுத்த வந்த திருடன் என்றும் கூறியிருந்தார். சிறுவனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சிருங்கி நந்தன் யாதவ், நரசிங்கானந்தால் பாராட்டப்பட்டது மட்டுமல்லாமல், நிகழ்நிலை நேர்காணல்களில் அவரது செயல்களை நியாயப்படுத்தினார். யாதவ் போன்ற இளைஞர்கள் நரசிங்கானந்துடன் தொடர்புபடுத்தப்பட்ட பின்னர் இஸ்லாமியர்களுக்கு எதிராக எப்படி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தி வயர் விரிவாகப் பதிவு செய்துள்ளது.

"வெறுக்கத்தக்க பேச்சுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய இந்திய அரசாங்கம் மற்றும் முகநூல் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்புணர்வை நாங்கள் சரிசெய்ய விரும்புகிறோம், அவர்கள் அத்தகைய சாமியார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்களுடைய வெறுப்பு பேச்சுக்களுக்கு ஊதுகுழல்களாகவும், வெறுப்புச் சூழலைப் பல்கி பெருகச் செய்வனவாகவும் இருக்கின்றனர்,” என ஹேக் பரப்புரையுடன் தொடர்புடைய ஒரு ஆர்வலர் 'தி வயரிடம்' கூறினார்.

தி லண்டன் ஸ்டோரி வெளியிட்ட அறிக்கையில், இந்திய அரசாங்கம் நரசிங்கானந்த் மற்றும் அவரது சீடர்கள் போன்ற கடும் போக்காளர்களுக்கு இஸ்லாமியர் எதிர்ப்பு வன்முறையைத் தூண்டுவதற்கு அரசியல் ஆதரவை வழங்குகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.".

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுடனான அரசியல் தொடர்பு காரணமாக, யதி நரசிங் ஆனந்த்  தனது மனிதாபிமானமற்ற மற்றும் இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டியதற்காக எந்தவொரு சட்டரீதியான விளைவுகளையும் சந்திக்கவில்லை” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு முறை, நரசிங்கானந்தைக் கைது செய்யுமாறு உத்தரப் பிரதேச காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் பலனில்லை.

அக்டோபர் 2021 இல், காசியாபாத் காவல்துறை நரசிங்கானந்த் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகியது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. நரசிங்கானந்த் மற்றும் அவரது சீடர்களின் காணொளிகள் குறித்து முகநூல் நிறுவனத்திடமும் புகாரளித்துள்ளதாக அது கூறுகிறது. அவை வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தொடர்பான முகநூல் கொள்கைகளை மீறுவதாக இருந்தபோதிலும், அந்த காணொளிகளை லட்சக்கணக்கானவர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவை இந்தியாவில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டவும் செய்துள்ளன. பிப்ரவரி 2021 இல், வடகிழக்கு தில்லியில் நடந்த கொடிய கலவரங்களுக்கு முன்னதாக, இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதில் நரசிங்கானந்த் மற்றும் அவரது இந்துத்துவா சுற்றுச்சூழல் அமைப்பின் பங்கை தி வயர் முன்னரே வெளியிட்டுள்ளது.

இத்தகைய ஆபத்தான பேச்சுக்களை பதிவிடவும், பரப்பவும் முகநூல் உதவியதாக குழு குற்றம் சாட்டியது. உண்மையில், நரசிங்கானந்த் மற்றும் அவரது சீடர்களின் காணொளிகளுக்கு எதிராக இந்தியாவில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும், அவர்களின் ஆபத்தான பேச்சை முகநூல் தொடர்ந்து பரப்பி வருவதாக புலம்பெயர்ந்தோர் குழு குற்றம் சாட்டியுள்ளது. லண்டன் ஸ்டோரியின் புலனாய்வுகள், இந்தியாவில் உள்ள முகநூல் நிறுவனம் ஒரு மெய்நிகர் "படுகொலை சதுக்கம்" என்று காட்டுகின்றன. அதில் இடுகையிடப்படும், அந்தத் தளத்தில் அதிவேகமாகப் பரவும் உள்ளடக்கம் தொடர்பான மனித மேற்பார்வையின் முழுமையான பற்றாக்குறை உள்ளது என்றும் அந்த அறக்கட்டளையின் அறிக்கை கூறுகிறது. "மனித உரிமைகள் தினத்தில் (நவம்பர் 10), உலகெங்கிலும் உள்ள சிறுபான்மையினரின் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தவறியதற்காக அரசுகளின் தலைவர்களுடன் முகநூல் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் பொறுப்புக் கூறுவது மிகவும் முக்கியமானது.” என்று அந்த அறிக்கை கோருகிறது.

வெறுப்பு பேச்சு

அண்மையில், முகநூலிலிருக்கும் பல மனித உரிமைகள் குழுக்கள் சமூக ஊடக தளத்தில் வலதுசாரி குழுக்கள் மற்றும் ஆளும் கட்சியின் தலைவர்களின் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். நவம்பர் 2020 இல், முன்னாள் முகநூல் ஊழியர் மார்க் எஸ். லக்கி, தில்லி அரசாங்கக் குழு முன்பு அந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தில்லியில் வெடித்த பெரிய அளவிலான மதவெறி வன்முறையில் முகநூலின் பங்கு பற்றி சாட்சியமளித்தார்.

வெறுக்கத்தக்க உள்ளடக்கம் குறித்து பயனர்களிடமிருந்து பல புகார்கள் இருந்தபோதிலும், முகநூல் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று லக்கி குழு முன் கூறியிருந்தார். உள்ளடக்கத்தை அகற்றும் அல்லது நீக்கும் திறனுடன் கூடுதலாக, முகநூல் அதன் நிரலாக்கத்தை (அல்காரிதத்தை) மாற்றுவதன் மூலம் மக்கள் பார்க்கும் மற்றும் பார்க்காதவற்றில் தலையிடலாம்.இது மீதமுள்ளவை அகற்றப்படும்போதும் சில தகவல்களை நிகழ்நிலையில் இருக்க அனுமதிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

2020 ஆம் ஆண்டின் முற்பகுதியில் குடியுரிமை (திருத்தம்) சட்டப் போராட்டங்களுக்குப் பிறகும், முதல் கோவிட்-19 முழு ஊரடங்கின் போதும் முகநூலில் இந்திய வெறுப்புப் பேச்சுக்கள் அதிகரித்ததை  அதன் சில உள் அறிக்கைகளை மதிப்பாய்வு செய்த சமூக ஊடக நிறுவனமான தி வயர் கண்டறிந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு, முகநூலில் நடந்த ஒரு உள் ஆய்வுக் கூட்டத்தில், இந்தியாவில் 'ஒப்பீட்டளவில் குறைவான சிக்கல் உள்ளடக்கம் (வெறுக்கத்தக்க பேச்சு)' இருப்பதாகக் குறிப்பிட்டது. ஆனால் 2020 வாக்கில், 'அழற்சி பாதிப்பு' 300% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவின் முகநூல் உயர் அதிகாரியான அங்கி தாஸ், ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளால் வெளியிடப்பட்ட வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக செயல்பட மறுத்ததாகக் கூறப்படும் வழக்கில் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

;