india

img

‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச்சொல்லி ரிக்சா தொழிலாளி மீது தாக்குதல்.... கான்பூரில் விஎச்பி, பஜ்ரங்தள் மதவெறிக் கும்பல்கள் அராஜகம்.... 5 வயது மகள் அழுதுத் துடித்தும் மனமிரங்கவில்லை.....

கான்பூர்:
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் அப்சர் அகமது (34). எலெக்ட்ரிக் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி ஆவார். இவர், கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ரிக்‌ஷா ஓட்டி வந்து  கொண்டிருந்தபோது, பஜ்ரங் தள் மதவெறிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை வழிமறித்து, இழிவாகப் பேசியதுடன், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறச்சொல்லி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

அகமதுவுடன் அவரது 5 வயது மகள் இருந்த நிலையில், அவர் தனது அப்பாவை விட்டுவிடுமாறு அழுது துடித்தும்கூட மனமிரங்காமல் மதவெறிக் குண்டர்கள் தங்களின் தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். மேலும், அப்சர் அகமதுவையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபிறகே, அப்சர் அகமது விடுவிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய பிறகே, பஜ்ரங் தள் மதவெறிக் குண்டர்களின் அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இ-ரிக்‌ஷா ஓட்டும் அப்சர் அகமது நாட்டுக்கு எதிராக ‘தேசவிரோத’ முழக்கங்களை எழுப்பியதாக கூறி, பஜ்ரங் தளம் குண்டர்கள் துன்புறுத்துவதும், தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்து அப்சர் அகமது கெஞ்சும் காட்சிகளும், அவருடைய ஐந்து வயது குழந்தையும், அப்பாவை விட்டுவிடுங்கள் என்று கதறியழும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளன. தற்போது, அப்சர் அகமது அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரிந்த 5 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் மீது, ஐபிசி பிரிவுகள் 147 (கலவரம்), 323 (வேண்டுமென்றே தாக்குதலில் ஈடுபடுதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவமதித்தல்) மற்றும் 506 (மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கான்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அவர்களில் பாண்டு வாலா என்ற அஜய் ராஜேஷ், அமன் குப்தா மற்றும் ராகுல் குமார் ஆகியோர் வியாழக்கிழமையன்று கைதும் செய்யப்பட்டுள்ளனர்.எனினும், இவ்வளவு நடந்தும் கொஞ்சமும் அஞ்சாத பஜ்ரங் தள், விஎச்பி குண்டர்கள், தங்கள் மீதான வழக்கை எதிர்த்தும், கைது செய்த 3 பேரை விடுதலை செய்யக் கோரியும், காவல்நிலையம் முன்பே அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 2 இளைஞர்கள் அப்சர் அகமது-வின் அண்டை வீட்டைச் சேர்ந்தவர்கள். இரு குடும்பங்களுக்குமான முன்விரோதத்தை மனதில் வைத்து அகமது பொய்ப்புகார் கொடுத்துள்ளார். மேலும், இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை மதம் மாற்றியதை தட்டிக் கேட்டதாலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தாக்குதல் நாடகம் நடத்துகிறார் என்று அப்சர் அகமது மீதான தாக்குதலை திசைத்திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.