கர்நாடக முதல்வராக இன்று மாலை பதவியேற்கும் எடியூரப்பா வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், குமாரசாமி தலைமையில் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன.
இதையடுத்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் புதிய அரசை அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக தலைவர்கள் தீவிரமாக களத்தில் இறங்கினர். இதை தொடர்ந்து, அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா, ஆட்சி அமைக்க ஆளுநர் கடிதம் தந்து இருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்க இருப்பதாகவும் கூறினார்.
இந்த சூழலில், கர்நாடக முதல்வராக இன்று மாலை பதவியேற்கும் எடியூரப்பா வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார்.