india

img

யெச்சூரிக்கு விடை கொடுத்தது ஜேஎன்யு

ஜேஎன்யு எனப்படும் நாட்டின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சற்று  நேரம் இளைப்பாறினார்  சீத்தாராம் யெச்சூரி.

அநேகமாக இந்திய வரலாற்றில் ஓர் அரசியல் தலைவருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் பல நூற்றுக்கணக்கானோர் ஒன்றுகூடி, உணர்ச்சிப் பெருக்கோடு கண்ணீர் சிந்தி, உதிரம் கொப்பளிக்க லால் சலாம் முழக்கமிட்டு பிரியாவிடை அளித்திருக்கிறார்கள் என்றால் அது சீத்தாராம் யெச்சூரிக்குத்தான். 

ஜேஎன்யு மாணவர் பேரவையின் தலைவராக தொடர்ந்து 3 முறை தேர்வு செய்யப்பட்ட யெச்சூரியின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 

1975 அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து தேசமே கொந்தளித்தது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அந்த மாபெரும் கொந்தளிப்பின் உலைக்களமாக இருந்தது. அந்த எழுச்சியின் நாயகனுக்குத்தான் 2024 செப்டம்பர் 13 வெள்ளியன்று பிரியாவிடை கொடுத்தனர் மாணவர்கள்.

சுமார் 50 ஆண்டுகள் ஆகியும்... பல தலைமுறை மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் படித்து, புதிய தலைமுறை வந்த பிறகும்... அரை நூற்றாண்டு காலமாக இன்னும் அந்த மாணவர்களின், அந்தப் பல்கலைக்கழக வளாகத்தின் காந்த சக்தியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சீத்தாராம் யெச்சூரி. 

செப்டம்பர் 14  (இன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.ஜி. பவனில், நாடே அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படுகிறது பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் உடல். அதற்கு முன்னதாக, தங்கள் ஆருயிர்த் தோழருக்கு செவ்வணக்கம் செலுத்தி அனுப்பி வைத்தனர் ஜேஎன்யு மாணவர்கள்.