ரயில்வே வருமானம் அதிகரித்தும் மூத்த குடிமக்களுக்கு சலுகை மறுப்பது ஏன்? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
இன்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் மூத்த குடிமக்கள் பயணம் பற்றி நான் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
21- 22 இல் ஐந்து கோடியே 55 லட்சம் மூத்த குடிமக்கள் பயணம் செய்ததாகவும் 2019 20ல் கோவிடுக்கு முன்பு 6.18 கோடி மூத்த குடிமக்கள் பயணம் செய்ததாகவும் பதில் அளித்துள்ளார்.
பயணிகள் கட்டணம் 19 -20 இல் 4529 கோடியாக பயணிகள் கட்டண வருமானம் இருந்தது. அதுவே 2020 - 21 இல் 2880 கோடியாக கோவிடால் குறைந்தது. அதன் பிறகு 2021 -22ல் பயணிகள் வருமானம் வழக்கமான நிலையை எட்டி 4008 கோடியை அடைந்துள்ளது. அதாவது கோவிடுக்கு முந்தைய நிலையை நெருங்கி வருமானம் எட்டி விட்டது என்றும் அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்கள் 2019- 20 இல் 6.18 கோடி பேரும், 2020- 21 இல் 1.90 கோடி பேரும், 2021- 22 இல் 5.55 கோடி பேரும் பயணம் செய்துள்ளனர் என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இப்பதில்கள் நமக்கு பல உண்மைகளை தெரிவிக்கின்றன.
வருவாய் குறைந்துள்ளதால் சலுகை கட்டணம் வழங்க இயலவில்லை என்ற காரணம் தற்போது இல்லை. பயணிகள் கட்டண வருவாய் கோவிட்டுக்கு முந்தைய நிலையை நெருங்கி விட்டது. இருந்தாலும் அரசு மறுக்கிறது.
இரண்டாவதாக மூத்த குடிமக்கள் பயண எண்ணிக்கை அதிகரித்தாலும் 57 லட்சம் கோவிட்டுக்கு முந்தைய காலத்தை விட குறைவாக உள்ளது. கட்டண சலுகை மறுக்கப்படுவதே இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. ஓய்வு கால வருமானம் பலரின் அன்றாட வாழ்க்கைக்கே போதுமானதாக இல்லாத நிலையில் அவர்களின் மனித உறவுகள் கூட பறிக்கப்படுவதன் அடையாளம் இது. குடும்பம் நட்பு சார்ந்த நிகழ்வுகளை கூட தவிர்க்க வேண்டிய சூழலை அரசு உருவாக்கியுள்ளது. சலுகை கட்டணம் வழங்கப்பட்டு இருந்தால் ரயில்வே வருவாயும் அதிகரித்து இருக்கும்.
மூன்றாவது, மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்தால் அரசுக்கு கூடுதல் வருமானம் எவ்வளவு என்று கணக்கிட இயலவில்லை என்று அமைச்சர் பதில் அளிப்பது முரண்பாடாக உள்ளது. 2019 - 20 இல் சலுகையை தந்ததால் ரூ.1667 கோடி இழப்பு என்று கணக்கு போட முடிகிற அரசாங்கத்திற்கு கட்டண சலுகை ரத்து காரணமாக எவ்வளவு மிச்சம் என்ற கணக்கு தர முடியவில்லை என்பதை எப்படி நம்புவது? "டிஜிட்டல் இந்தியா" இப்படி எளிய மக்களின் கணக்கை போடாது என்றால் அது பாரபட்சம் அல்லவா?
எனவே பயணிகள் வருமானம் இப்போது பழைய நிலையை நெருங்கிய பிறகும் மூத்த குடி மக்களுக்கான பயண சலுகையை திரும்ப வழங்க மறுப்பது நியாயமற்றதாகும். ஸ்பெயின் போன்ற நாடுகளில் விலைவாசி உயர்வை சரிசெய்ய அனைத்து பயணிகளுக்கும் இலவச பயணம் அளிக்கிறார்கள்.
இந்திய ரயில்வேயில் இலவச பயணம் கூட மூத்த குடிமக்கள் கோரவில்லை. கொடுத்து வந்த பயண சலுகையையாவது திரும்பத் தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.
கருணை அற்ற அரசு கண்மூடித்தனமாக நிராகரிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.