india

img

பட்டினி போட்டாலும் பணியாத தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும் - சு.வெங்கடேசன் எம்.பி

பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும், பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும் என்று மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய நிதிமானியக் கோரிக்கையில் சு.வெங்கடேசன் எம்.பி-யின் உரை  பின்வருமாறு;

“மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே , வணக்கம் . எனக்கு முன்னால் குறுக்கீடு செய்து பேசிய மாண்புமிகு அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் இந்தியை எதிர்த்தால் அது இந்தியாவை எதிர்ப்பது என்று அவர் கூறினார். இந்தித் திணிப்பை எதிர்த்தால் தான் அது இந்தியாவைப் பலப்படுத்துவது என்பதை அமைச்சருக்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இந்தியா ஹிந்தியா அல்ல ; எல்லா மொழிகளினுடைய சமத்துவத்தில் தான் இந்தியா நிற்கிறது. காசி தமிழ்ச் சங்கத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை , கல்விக்கு காசு கொடுங்கள் என்று கேட்டால் அது புரியாத உங்களுக்கு , எந்தத் தாய்மொழியின் அருமையும் புரியப் போவதில்லை. கல்வியின் அருமையும் புரியப் போவதில்லை. கூட்டாட்சியின் மீதான தாக்குதல் தான் நவ பாசிசத்தினுடைய கூறு. நாங்கள் நீங்கள் கொடுத்த அறிக்கையில் இருந்து சொல்கிறோம். நிதி அயோக்கின் அறிக்கை வறுமை ஒழிப்புத் திட்டத்தில் முன்மாதிரியாக இருக்கிற முதல் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. உங்களது பொருளாதார அறிக்கையில் மனிதவளத்தைப் பெருக்குவதில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. நீங்கள் கொடுத்திருக்கிற அறிக்கையில் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்கிறது. உயர்கல்வி துவங்கி பொது சுகாதாரம் வரை தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் நாங்கள் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு நீங்கள் திருப்பிக் கொடுப்பது வெறும் 29 பைசா மட்டுமே என்பது எவ்வளவு அவலமானது . ஆனால் பீகார் செலுத்துகிற 1 ரூபாய் வரிக்கு 7 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள். உத்தரப் பிரதேசம் கொடுக்கிற 1 ரூபாய் வரிக்கு 1.75 ரூபாய் திருப்பிக் கொடுக்கிறீர்கள் . இப்படி திருப்பிக் கொடுக்கிற எங்கள் உரிமையைக் கேட்டால் , நீங்கள் எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள். நிதியில் , கல்வியில் , ஆட்சி நிர்வாகத்தில் என எல்லா முனைகளிலும் கூட்டாட்சியைத் தாக்குகிறீர்கள். மாநிலங்களைப் பட்டினி போட்டு பணிய வைக்கிறீர்கள். பட்டினி போட்டு பணிய வைக்கும் உங்களது அதிகாரத்திற்கு எதிராக நிமிர்ந்து நிற்பவர்களை நாகரிகமற்றவர்கள் என்று சொல்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்திய வார்த்தையை நீங்களே திரும்பப் பெறுகிறீர்கள் என்றால் , எவ்வளவு நாகரிகமற்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தினீர்கள் என இப்போதாவது நீங்கள் உணர்கிறீர்களா என்று நாங்கள் கேட்கிறோம். நீங்கள் அந்த வார்த்தையைத் திரும்பப் பெற்ற பிறகும் தமிழ்நாட்டிலே இருக்கிற ஒரு ஒன்றிய அமைச்சர் உங்களது பேச்சை ஆதரிக்கிறார் என்றால் , இது தான் நாகரிகமா என்று நாங்கள் கேட்க நினைக்கிறோம். கல்வி அமைச்சகத்தின் கீழே வருகிற ஐஐடியின் இயக்குநர் மாட்டு மூத்திரம் குடிக்கச் சொல்கிறார் , அது நாகரிகமா எனக் கேட்க உங்களால் முடியவில்லை . கல்விக்குக் காசு கேட்டால் எங்களைப் பார்த்து நாகரிகமா என்று நீங்கள் எங்களைக் கேட்கிறீர்கள் . அதேபோல இந்தியர்களைக் கைவிலங்கிட்டு அனுப்பி வைத்தது அமெரிக்கா. அதன் மீது கோபம் வரவில்லை. அதற்கு எதிராக கார்ட்டூன் போட்ட ஆனந்த விகடன் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கிறீர்கள். இது நாகரிகமா என்று உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கிறோம். மூன்று வருடமாகப் பற்றி எரிகிறது மணிப்பூர். ஒருமுறை கூட பிரதமர் போகவில்லை. ஒருமுறை கூட போகாத பிரதமர் இருக்கிற ஒரு அவைக்கு மணிப்பூரின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறீர்களே ? இது நாகரிகமா என்ற கேள்வியை உங்களிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம். இதே அவையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறோம். ஆனால் 848 இருக்கையை இந்த அவையிலே நீங்கள் அமைத்திருக்கிறீர்கள். உங்களது மறைமுக சதித்திட்டத்திற்காக தென் மாநிலங்களின் உரிமையை நசுக்க நினைக்கிற உங்களின் சதிக்கு எதிராக இன்றைக்குத் தமிழ்நாடும் , தமிழ்நாட்டின் முதலமைச்சரும் , தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் இன்றைக்கு ஓரணியில் நிற்கிறார்கள். தென்மாநிலங்களுக்கு நீங்கள் இழைக்கிற வஞ்சகத்திற்கு எதிராக இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பதற்கு நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம்.

அதேபோல இதே அவையில் நீங்கள் தாக்கல் செய்திருக்கிற இந்த நிதி நிலை அறிக்கையில் சிறு , குறு தொழில்களுக்கு மிக அதிகமான வட்டி. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு மிக அதிகமான வரிவிலக்கு. உங்களது வரிக்கொள்கையை ஒரு வரியில் விளக்குவதற்கு இது ஒன்றே போதுமென்று நினைக்கிறேன். அதேபோல கடந்த மூன்று மாதமாக MNREGA திட்டத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை ஒன்றிய அரசு விடுவிக்க மறுக்கிறது. எங்களது மதுரை மாவட்டத்தில் மட்டும் 121 கோடி ரூபாய் உழைத்த மக்களுக்கான கூலியை நிறுத்தி வைத்திருக்கிறார் பிரதமரும் , நிதி அமைச்சரும் என்ற குற்றச்சாட்டை இந்த அவையிலே நாங்கள் முன்வைக்க விரும்புகின்றோம். அதேபோல இன்றைக்கு மும்மொழிக் கொள்கையைக் கடைபிடித்தால் தான் தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குக் கொடுக்க வேண்டிய 2500 கோடியை விடுவிப்போம் என்று கல்வி அமைச்சர் சொல்கிறார். பட்டினி போட்டு பணிய வைக்க முடியும் என்று அதிகார வர்க்கம் நினைத்தால் , பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும் , பகுத்தறிவும் கொண்ட தமிழ்சமூகம் உங்களுக்குப் பாடம் புகட்டும். கொடுப்பதால் மட்டுமே நீங்கள் உயர்ந்தவர்கள் , பெறுவதால் மட்டுமே நாங்கள் தாழ்ந்தவர்கள் அல்ல. அரசியல் சாசனத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை தமிழ்நாடு மீண்டும் மீண்டும் புரிய வைக்கும்.” இவ்வாறு அவர் பேசினார்.