வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதை வங்கிகள் உடனடியாக நிறுத்துமாறு கடந்த மே 19-ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. இந்த நிலையில், இன்று வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வரும் 23-ஆம் தேதி முதல் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
- வங்கிகள் மட்டுமல்லாமல் 19 பிராந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
- சில்லறையாக மாற்றும்பட்சத்தில் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.20,000 மதிப்பிலான தொகையை மட்டுமே மாற்ற முடியும்.
- வாடிக்கையாளர் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமல்லாமல், வேறு வங்கிகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.