india

img

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு, சிறுபான்மை அந்தஸ்து செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலைகலைக்கழகம் உத்தரப்பிரதேசத்தில் 150 ஆண்டுகளுக்கு முன், சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்டது. முஸ்லிம் மாணவ, மாணவிகள் அதிகம் பயிலும் இக்கல்வி நிறுவனத்தில் அவர்களுக்காக ஐம்பது சதவிகித ஒதுக்கீடு இருந்தது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் அலகபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் சிறுபான்மை கல்வி நிறுவனமாக இருந்தது கிடையாது என தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பின் அமர்வு விசாரணை செய்து வந்தது.

சுமார் 18 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 4 நீதிபதிகள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை நிறுவனம் தான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். அலிகர் இஸ்லாமிய பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்தை மறுக்க முடியாது. நிறுவனம் சிறுபான்மையினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்றும் இவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதை எந்த அடிப்படையில் முடிவு செய்யலாம் என்பதற்கான விளக்கங்களை தெளிவு படுத்தி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.