அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் 4 முக்கிய சங்கராச்சாரியார்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் என முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பிதழ் நேரில் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் 4 முக்கிய சங்கராச்சாரியார்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என உத்தரகாண்ட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கோவில் கட்டுமான பணி முழுமையாக முடிவடையாத நிலையில், இந்து வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களுக்கு எதிராக ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதனால், நாட்டின் 4 முக்கிய சங்கராச்சாரியார்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே பூரி மடத்தின் சங்கராச்சாரியார் நிச்சலானந்தா சரஸ்வதி, ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவ்விழாவுக்கு தான் செல்லப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.