india

img

 ஐஐடி, ஐஐஎம் களில் 122 மாணவர்கள் தற்கொலை

2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை  நாடு முழுவதிலும் உள்ள ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் உயர் கல்வி நிலையங்களில்  122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், அதில் 27 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தனக்குச் சாதி ரீதியிலான நெருக்கடிகள் தரப்படுகின்றன எனக் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். 2017 ஆம் ஆண்டு தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணனும், 2019 மே மாதம் மும்பை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராகப் படித்த டாக்டர் பாயல் தத்வியும், 2019 ஆம் ஆண்டு சென்னை ஐஐடி மாணவி பாத்திமா என சென்னை உள்ளிட்ட பல்வேறு ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிலையங்களில் தொடர்ச்சியாக மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஹைதராபாத் ஐஐடியில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

மேலும், இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் ஐ.ஐ.டியில் இருந்து தங்களின் உயர் கல்வி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில், உயர் கல்வி நிலையங்களில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் தற்கொலை விவரங்களை வழங்குமாறு மக்களவையில் நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளார். 

அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் உயர் கல்வி நிலையங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அதில் 24 மாணவர்கள் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் (எஸ்சி) என்றும்,41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) என்றும், 3 பேர் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) என்றும்  அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த தரவுகளின்படி இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (ஐஐடி) 34 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேரும், பட்டியலின பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேரும் அடங்குவர்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம் -ல் 5 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேசிய தொழில்நுட்பக் நிறுவனமான ஐஐடி -ல் கடந்த ஏழு ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 11 மாணவர்கள், பட்டியலின பிரிவைச் சேர்ந்த 6 மாணவர்கள் உள்பட 30 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஒன்றிய பல்கலைக்கழகங்களில் 37 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்  ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இந்த புள்ளி விவரம் பல்வேறு தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 122 மாணவர்களின் கல்விக் கனவை ஒன்றிய அரசு சிதைத்து விட்டதாகவும் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.