புதுதில்லி:
பொருளாதாரத்தை மேம்படுத்துவது தான் அரசின் வேலை, சர்க்கஸ் காண்பிப்பது அல்ல என்று மத்திய அமைச்சரை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.அமெரிக்க வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு இந்த ஆண்டுபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், அது உடனடியாக சீரடையும் என உறுதி கூற முடியாது என்றும் அபிஜித் பானர்ஜி குறிப்பிட்டிருந்தார். அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர். காங்கிரஸ் கட்சியின் வறுமை ஒழிப்பு திட்டமான ‘நியாய்’ திட்டத்தை பானர்ஜி ஆதரித்தார். அவரது இந்த சித்தாந்தத்தை இந்திய மக்கள் நிராகரித்துவிட்டதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர்பக்கத்தில், ‘பொருளாதாரம் வீழ்ச்சியைநோக்கி உள்ளது. அதை மேம்படுத்துவதே மத்திய அரசின் வேலை, காமெடிசர்க்கஸ் காண்பிப்பது அல்ல’ என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார். அபிஜித் பானர்ஜி தனது பணியைநேர்மையாக செய்ததால் நோபல் பரிசுக்கு தகுதியானவராக அறிவிக்கப்பட்டார். பாஜக தலைவர்கள் தங்களது வேலையை செய்வதற்கு பதிலாக மற்றவர்களின் சாதனைகளை மறைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்று விமர்சித்தார்.