india

img

ஜெ.என்.யு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் - இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

தில்லி ஜெ.என்.யுவில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று முகத்தில் துணியை கட்டிக் கொண்டு வந்து ஏபிவிபி குண்டர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.  இதில் அப்பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் ஆயிஷ் கோஷ், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இந்த தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்  மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ”ஜெ.என்.யு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாக்கப்பட்டதை இந்திய மருத்துவ சங்கம் கண்டிக்கிறது. இந்த சம்பவம், நாட்டில் அராஜகம் நடைபெறுவதையும், முழுமையாக சட்ட ஒழுங்கு நொறுக்கப்பட்டுள்ளதையும் காட்டுகிறது. நாட்டின் தலைநகரிலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது இந்த அரசின் அலட்சியமான ஆட்சியை குறிக்கிறது. மருத்துவர்கள், தங்கள் பாதுகாப்பை தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. இந்த நாட்டில், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க சென்ற மருத்துவர்கள் கூட பாதுகாப்பு வழங்க முடியாதது எதை பிரதிபலிக்கிறது? எது என்ன உள்நாட்டு போரா? இந்த சம்பவம் உலகத்துக்கு சொல்லும் செய்தி என்ன? மேலும், உள்துறை அமைச்சகம் இந்த தாக்குதலை கண்டித்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.