ஜெ.என்.யு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு, இந்து தீவிரவாத அமைப்பான இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது.
தலை சிறந்த அறிஞர்களை உருவாக்கும் பல்கலைக்கழகம் என்கிற பெயர், ஜேஎன்யுவிற்கு உண்டு. இந்நிலையில் மோடி அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வலுமிக்க போராட்டத்தை நடத்தியும், மத்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை அம்பலப்படுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் பல்கலைக்கழக விடுதி கட்டணத்தை எதிர்த்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு முகமூடி அணிந்து சிலர் ஆயுதங்களோடு நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் மாணவர் பேரவை தலைவரான ஆய்ஷே கோஷ் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக, தாக்குதலுக்கு உள்ளான ஜெ.என்.யு மாணவர் பேரவை தலைவர் ஆய்ஷே கோஷ் உள்ளிட்ட 19 பேர் மீதே தில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்து தீவிரவாத அமைப்பான இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது. இந்து ரக்ஷா தளத்தின் தலைவர் பூபேந்திர தோமர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொள்வதாக ஒப்புக்கொண்ட வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில், ”ஜெ.என்.யுவில் தேசிய எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்து ரக்ஷா தளத்தை சேர்ந்தவர்கள் ஜெ.என்.யு வளாகத்திற்குள் நுழைந்தனர். ஜெ.என்.யு, கம்யூனிஸ்டுகளின் மையமாக இருக்கிறது, இதுபோன்ற மையங்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர்கள் எங்கள் மதத்தையும் நம் நாட்டையும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எங்கள் மதம் குறித்த அவர்களின் அணுகுமுறை தேச விரோதமானது. எதிர்காலத்தில், யாராவது தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றால் மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதே நடவடிக்கையை எடுப்போம்” என்று அவர் பேசியுள்ளார்.
முன்னதாக ஜெ.என்.யு வளாகத்தில் இரண்டு மாணவர்கள் தடி ஏந்தியவாறு உள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. இந்த வீடியோவில் இருக்கும் 2 மாணவர்களும் ஆர்.எஸ்.எஸ்-யின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று ஏபிவிபி தில்லியின் இணை செயலாளர் அனிமா கோங்கர் ஒப்பு கொண்ட பிறகே, இந்து ரக்ஷா தளம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.