india

img

பினராயி அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

கொச்சி:
கொச்சி நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குடன் கழிவுநீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் தோல்வியடைந்ததை விமர்சித்த கேரள உயர்நீதிமன்றம் முதல்வர் பினராயி விஜயனின் தலையீடுக்கு பாராட்டு தெரிவித்தது. கேரளம் முழுவதும் திங்களன்று பெய்த பலத்த கன மழை பெய்தது. கொச்சி நகரத்தில் சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்தது. சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்காத பகுதிகள்கூட இம்முறை வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட மக்கள் தெருக்களில் இறங்கி மாநகராட்சியின் கையாலாகத்தனத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். உயர்நீதிமன்றம் அமைந்துள்ள கொச்சி நகரின் அவலநிலையை நீதிபதிகளும் நேரில் காண நேர்ந்தது. இந்நிலையில் கொச்சியிலுள்ள பேரண்டூர் கால்வாய் குறித்த வழக்கு விசாரணை நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநகராட்சியின் நடவடிக்கையை விமர்சித்த நீதிபதி ‘இப்படிப்பட்ட ஒரு நகரசபையை கலைக்க அரசு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார். இப்பிரச்சனையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். புதனன்று நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் முதல்வரின் தலையீடு காரணமாக கழிவுநீர் கால்வாய் அடைப்புகள் நீக்கப்பட்டு வெள்ளம்  ளியேற்றப்பட்டதையும் தெரிவித்தார். அரசின் நடவடிக்கையை பாராட்டிய நீதிபதி, முதல்வர் தலையிடாமல் போயிருந்தால் நிலைமை மிக மோசமாகியிருக்கும் எனவும் தெரிவித்தார். கொச்சி நகரின் கழிவுகளை அகற்றி, வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு ‘பணிக்குழு’ அமைக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த குழுவில் தலைமைச் செயலாளர், உள்ளாட்சிகளின் முதன்மை செயலாளர், மாநகராட்சி செயலாளர், மெட்ரோ குடிநீர் ஆணையம், கேஎஸ்இபி, ரயில்வே உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளையும் பணிக்குழுவில் இணைக்க வேண்டும் என நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவில் தெரிவித்துள்ளார். பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆட்சியர் இருப்பார் என கருதப்படுகிறது.பணிக்குழுவில் யாரெல்லாம் இடம்பெறலாம் என்பதை அரசே முடிவு செய்யலாம். வெள்ளப்பெருக்கை கையாள்வதில் மாநகராட்சி தோல்வி அடைந்த பின்னணியில் முதல்வரின் உத்தரவின் பேரில் குறுகிய நேரத்தில் அரசு இயந்திரம் மேற்கொண்ட ‘ஆப்பரேசன் ப்ளாக் த்ரு’ நடவடிக்கையை நீதிபதி பாராட்டினார். மாவட்ட ஆட்சியர், தீயணைப்புத்துறை, காவல், கேஎஸ்இபி, வருவாய் உள்ளிட்ட அனைவரும் சிறப்பான பணியை மேற்கொண்டனர்  எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.  

முதல்வர் தலைமையில்  நாளை ஆலோசனை
கொச்சி மாநகராட்சி நிர்வாகம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாக்கத் தவறிய நிலையில் தனியாக பணிக்குழு அமைத்து பணிகளை தொடர உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று (அக்.25) மாலை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்த புரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. இதில் கொச்சி மேயர், மாவட்ட ஆட்சியர், சம்பந்தப் பட்ட அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.