india

img

தொழிலாளர் வர்க்கத்தை வஞ்சிக்காதே!

புதுதில்லி:
தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக சட்டங்களை திருத்துவது, பொதுத்துறை நிறுவனங்களை முற்றாக தனியாருக்கு தாரைவார்ப்பது மற்றும் விவசாயத்தை கார்ப்பரேட் மயமாக்குவது உள்பட, கொரோனா ஊரடங்கைப்பயன்படுத்தி நாடு முழுவதும் உழைக்கும் மக்களுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி மே 22 வெள்ளியன்று 10 மத்திய தொழிற்சங்கங்களும் நாடு முழுவதும் உள்ளஅனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து மாபெரும் தேசம் தழுவிய போராட்டத்தை நடத்தின.

இப்போராட்டத்தில், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்று ஆவேச முழக்கமிட்டனர்.சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, எல்பிஎப்,யுடியுசி ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்களும் மாநில அளவிலான பல்வேறு தொழிற்சங்கங்களும் கூட்டாக இணைந்து, இப்போராட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு மின்னஞ்சல் வாயிலாக ஏற்கெனவே கடிதம் அனுப்பியுள்ளன.

 ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு மற்றும் நிவாரணம் வேண்டும்;நாடு முழுவதும் அனைவருக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி ரேசன் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும்; ஊரடங்கு அமலான ஒட்டுமொத்த காலத்திற்கும் எவ்வித பிடித்தமும் இல்லாமல் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ஊதியம் அளிப்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும்; வருமான வரி செலுத்தாத அனைத்து குடும்பங்களுக்கும் உடனடியாக ரூ.7500 பணம் டெபாசிட் செய்திட வேண்டும்; இதை பதிவு செய்த, பதிவு செய்யாத, சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள நாட்டின் ஒட்டுமொத்த உழைப்புப் படையினருக்கும் ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு தலா ரூ.7500 என்ற விதத்தில் அளித்திட வேண்டும்; அரசு ஊழியர்களின் பலன்களை நிறுத்திவைத்திருப்பது மற்றும் ஓய்வூதிய தாரர்களின் பலன்களை நிறுத்தி வைத்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் விதத்தில் தொழிலாளர் சட்டங்களில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளக்கூடாது, தொழிலாளர் சட்டங்களை நிறுத்தி வைக்கக்கூடாது என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று நாடு முழுவதும் இந்த மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

வங்கிகள், இன்சூரன்ஸ், பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, மத்திய - மாநில அரசு ஊழியர்கள் உள்படஅனைத்து நடுத்தர வர்க்க ஊழியர் சம்மேள னங்கள், சுயேட்சையான சம்மேளனங்கள் உள்பட
அனைத்து அமைப்புகளும் இந்த இயக்கத்தில்நேரடியாக பங்கேற்றன. அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றும் பெட்ரோலியத்துறை ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நிலக்கரி சுரங்கங்களில் செயல்படும் அனைத்து சங்க ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி, கர்நாடகா, அசாம், பீகார், சத்தீஸ்கர், பஞ்சாப், தமிழ்நாடு, புதுச்சேரி, ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிராவில் பல தொழிற்கூடங்களில் இரண்டு மணி நேர வேலைநிறுத்தம் நடைபெற்றது.தமிழ்நாட்டில் சுமார் 10 ஆயிரம் இடங்களில் அனைத்து சங்கங்கள் சார்பில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்ட இயக்கங் கள் நடைபெற்றன. கேரளாவில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒரு லட்சத்திற்கும்அதிகமானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாராஷ்டிராவில் 36 மாவட்டங்களிலும் அனைத்து சங்க போராட்டம் நடைபெற்றது. ஹரியானா, பஞ்சாப்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப் பட்டது. ஒடிசாவில் தொழிற்சாலைகள் நிரம்பிய ரூர்கேலா, சம்பல்பூர், பாரதீப் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்ட இயக்கங்கள் நடைபெற்றன. திரிபுரா, மணிப்பூரில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள், ஆசா திட்ட சுகாதார ஊழியர்கள் உள்பட ஏராளமான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ரயில்வே, மின்சாரம், தோட்டத் தொழி லாளர்கள், துறைமுக ஊழியர்கள், பீடித்தொழி லாளர்கள் உள்பட அனைத்து தரப்பு தொழி லாளர்களும் பங்கேற்றனர்.

தில்லியில் ராஜ்கட்டில் உள்ள காந்தி  சமாதி முன்பு மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய தலைவர்கள் பங்கேற்ற தர்ணா போராட்டம் நடைபெற்றது. சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, ஏஐடியுசி தேசிய செயலாளர் வித்யாசாகர் கிரி,  ஐஎன்டியுசி துணைத் தலைவர் அசோக் சிங், எச்எம்எஸ் பொதுச் செயலாளர் ஹர்பஜன் சித்து, சிஐடியு தேசிய செயலாளர்கள் ஏ.ஆர்.சிந்து, அமிதவகுகா உள்ளிட்ட தலைவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்டனர். 

அவர்கள் கைது செய்யப்பட்டு ராஜேந்திர நகர் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப் பட்டனர்.ஐஎன்டியுசி அகில இந்திய தலைவர் சஞ்சீவ ரெட்டி ஹைதராபாத்திலும், ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் லூதியானாவிலும், தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் சென்னையிலும், டியுசிசி தேசிய தலைவர் தேவராஜன் கேரளாவிலும், சேவா அமைப்பின் பொதுச் செயலாளர் மனாலி குஜராத்திலும் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தர ராசன், ஜி.சுகுமாறன் உள்பட அனைத்து சங்க தலைவர்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற இயக்கங்களில் பங்கேற்றனர்.