india

img

இந்தியாவில் கொரோனா பரவல் எண்டமிக் நிலையை எட்டி வருகிறது - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி  

இந்தியாவில் கொரோனா பரவல் எண்டமிக் நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சமடையக் கூடும் எனச் சமீபத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரித்து.  

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் எண்டமிக் நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் கூறுகையில், மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் மக்களின் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியில் பெரிய அளவில் மாற்றம் உள்ளபோது அந்த நோய் பரவல் சில ஏற்ற இறக்கங்களோடு நிரந்தரமாகவே இருக்கும். உதாரணத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியா காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்குமோ, அதேபோல இந்தியாவிலும் இந்த கொரோனா பரவிக்கொண்டே இருக்கும் என அவர் தெரிவித்தார்.  

முதல் இரண்டு அலைகளால் பெரிதும் பாதிக்கப்படாத தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மூன்றாவது அலை ஏற்பட்டால் அங்கு கொரோனாவின் தாக்கம் இருக்கும். ஆனால் 2022 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 70 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள். அப்போது இந்தியாவில் இயல்பு நிலை திரும்பும் சூழல் ஏற்படும்.

குழந்தைகளுக்குக் குறைந்த அளவிலான பாதிப்பே கொரோனாவால் ஏற்படுகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவுகளை ஏற்படுத்தி அனைத்து உட்கட்டமைப்புகளையும் தயார் நிலையில் அரசுகள் வைத்திருப்பது நலம் பயக்கும் எனச் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

மேலும், தொற்று பரவலைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுடன் மக்கள் எழத் தொடங்கிவிட்டனர் என்றும் இது ஆறுதல் அளிக்கும் விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.