மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் சமீபத்தில் ஓய்வு பெற்றதால், தற்போது 34 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்றத்தில் இரண்டு காலியிடங்கள் உள்ளன. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இரு நீதிபதிகளை பதவி உயர்வு செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதன்படி, மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே மற்றும் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில், நீதிபதிகள் அலோக் ஆராதே மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்கிறது.