புதுதில்லி, டிச. 6 - 9-ஆவது நாளாக வெள்ளியன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. மக்களவை யில் வழக்கம்போல அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால், நண்பகல் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்ந்ததால், டிசம்பர் 9 காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அதுபோலவே, எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக மாநிலங்களவையும் டிசம்பர் 9 வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் ஒன்றிய அரசு தடுப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் கருப்பு முகக் கவசம் அணிந்தும், அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியும் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி சென்றனர்.