வாரத்தில் 3 நாட்கள் 55சதவிகித இந்தியர்கள் தூங்குவதற்குச் சிரமப்படுவதாக ரெஸ்மெட் எனப்படும் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மருத்துவ சாதன நிறுவனமான ரெஸ்மெட் அதன் ரெஸ்மெட் ஏசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஸ்லீப் ஹெல்த் சர்வேயின் முடிவுகளைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா, பிரேசில், சீனா, ஜப்பான், கொரியா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த 17,040 பேர் கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் போதிய தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கத் தரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு தூங்கி காலை எழும் போது சுமார் 21 சதவிகிதத்தினர் மட்டுமே புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இந்த ஆய்வில் பங்கேற்ற 81 சதவிகிதத்தினர் மோசமான தூக்கப் பழக்கம் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், போதுமான தூக்கம் ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பராமரிக்க முக்கியமானது என்றும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் தூக்கத்துடன் போராடுபவர்கள் தங்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மனநிலை மாற்றங்கள் மற்றும் பகலில் கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரெஸ்மெட்டின் லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசியத் துணைத் தலைவர் கார்லோஸ் மான்டீல் கூறுகையில், ஒரு நல்ல இரவு தூக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் ஒருவரின் வாழ்வில் நல்ல தூக்கத்தின் தாக்கத்தை ஆராய இந்த கணக்கெடுப்பை நடத்தினோம். ஆனால் கணக்கெடுக்கப்பில் பங்கேற்ற 72 சதவிகிதம் பேர் போதிய தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கம் தங்களின் உணர்ச்சி நிலையைப் பாதித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற 81 சதவிகிதத்தினர் மோசமான தூக்கப் பழக்கம் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும் என்பதை உணர்வதாகவும், பாதிப்பைத் தடுக்க தங்களின் தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய செயல்களைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
34 சதவிகிதம் பேர் மோசமான இரவு தூக்கத்தின் அறிகுறி குறட்டை என்பதை அறிந்துள்ளனர். 51 சதவிகிதம் பேர் ஸ்லீப் டிராக்கரைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் 35 சதவிகிதம் பேர் தூக்கத்தின் போது தங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும், இந்தியாவைச் சேர்ந்த 55 சதவிகித பேர் சராசரியாக வாரத்தில் 3 இரவுகளில் தூங்குவதில் சிக்கல்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளனர். ஆனால் இவர்களில் 21 சதவிகித பேர் மட்டுமே சுகாதார நிபுணரிடம் உதவி கோரியுள்ளனர்.
தூங்கும் போது ஏற்படும் அறிகுறிகள் தூக்க கோளாறின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியவில்லை. எரிச்சல் அல்லது மனச்சோர்வு, காலை தலைவலி மற்றும் அதிக பகல் நேரத் தூக்கம் போன்ற மனநிலை மாற்றங்கள் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தூக்கம் தொடர்பாகக் கண்டறியப்பட்ட முதல் 3 அறிகுறிகள் எனவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.