சரத் சந்திர போஸ் இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் வழக்கறிஞராகவும் விளங்கியவர். இவர் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் நாள் பிறந்தார். இவர் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாஷ் சந்திர போசின் அண்ணன் என்பது குறிப்பிடத் தக்கது. 1936 ஆம் ஆண்டில் வங்கப் பிரதேச காங்கிரஸ் குழுவின் தலைவர் ஆனார். 1936 முதல் 1947 வரை அனைத்திந்திய காங்கிரசு குழுவில் உறுப்பினராக இருந்தார். 1946 முதல் 1947 வரை நடுவண் சட்ட சவைக்கு காங்கிரசு தூதுக் குழுவை வழி நடத்திச் சென்றார்.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டுப் போராடினாலும், அதே நேரத்தில் தம் இளவல் சுபாஷ் சந்திர போஸிவின் இந்தியத் தேசிய ராணுவத்தின் செயல்பாட்டையும் ஆதரித்தார். 1945 இல் சுபாஷ் சந்திர போஸ் காலமானதாக செய்தி வந்த பிறகு இந்தியத் தேசியப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகளைச் செய்தார். இந்தியா விடுதலை அடைந்ததும் தம் தம்பி சுபாஷ் சந்திர போஸ் நடத்தி வந்த பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து வழி நடத்திச் சென்றார்.சோலிசக் குடியரசுக் கட்சி என்னும் பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். இந்தியாவிலும் வங்கத்திலும் சோசலிச அமைப்பின் ஆட்சி மலர்வதை விரும்பினார். சரத் சந்திர போஸ் ஜப்பானிய அரசுடன் தொடர்பு வைத்திருந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டு 1941 ஆம் ஆண்டில் டிசம்பர் 12 ல் கைதானார். 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். சரத் சந்திர போஸ் 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் நாள் மறைந்தார்.
பெரணமல்லூர் சேகரன்