india

img

உறவினர்களை அதிகாரிகளாக நியமித்த மேற்கு வங்க ஆளுநர்? பாஜக - திரிணாமுல் கட்சியினர் டுவிட்டரில் மோதல்....

கொல்கத்தா:
தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது; திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்கள், எதிர்க்கட்சியினரைத் தாக்கி, அவர்களின் வீடுகள், சொத்துக் களை சூறையாடி வருகின்றனர் என்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். 

மேற்குவங்க சட்ட ஒழுங்கின் நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது; காவல்துறையினர், பழிவாங்கும் அரசியலுக்கு உடந்தையாக இருக்கின்றனர் என்று இரண்டு நாட்களுக்கு முன்பும்கூட டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.இதற்கு அதே டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்த திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. மஹூவா மொய்த்ரா, ஆளுநரை ‘அங்கிள் ஜி’ என குறிப்பிட்டு, ‘மேற்குவங்கத்தின் இந்த இக்கட்டான நிலை மேம்படவேண்டும் என்றால் நீங்கள் தில்லிக்கு சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள்’ என்றார்.

அத்துடன், நிற்காமல், ஆளுநர் ஜகதீப் தன்கர், தனது குடும்ப உறுப்பினர் களையே ஆளுநர் மாளிகைக்கான சிறப்பு அதிகாரிகளாக (officers on special duty - OSD) நியமித்திருக்கிறார் என்று பரபரப்பைக் கிளப்பினார். இவ்வாறுநியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர், பணி விவரம் மற்றும் அவர்களுக்கும் ஆளுநருக்குமான உறவுமுறை குறித்த பட்டியலையும் வெளியிட்டார்.ஆனால், ஆளுநர் தன்கர் அதை மறுத்ததுடன், ‘மஹூவா மொய்த்ரா கூறியகுற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. ஆளுநர் மாளிகையின் சிறப்பு அதிகாரிகள் 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 4 வேறு சாதிகளை சேர்ந்தவர்கள், இவர்கள் யாரும் என் சாதியையோ, என் மாநிலத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல. எனது நேரடி குடும்ப உறுப்பினர்களும் கிடையாது’ என்றார்.அதன்பிறகும் மொய்த்ரா விடுவதாகஇல்லை. ‘நியமனம் செய்யப்பட்டவர் களின் பூர்வீகம் என்ன, ஒவ்வொருவரும் எப்படி ராஜ் பவனுக்குள் வந்தனர் என்பதைவிளக்குமாறு அங்கிள் ஜி-யிடம் கேட்கிறேன். பாஜகவின் ஐடி பிரிவுகூட இந்தபிரச்சனையிலிருந்து உங்களை வெளியே கொண்டுவர முடியாது. இந்தியாவின் குடியரசுத் துணைத்தலைவரும் உங்களுக்கு உதவுவார் என நான் நினைக்கவில்லை’ என மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவலால் மக்கள் கடுமையான நோய் மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், அதனை திசைத்திருப்பும் வகையில், பாஜகவும். திரிணாமுல் கட்சியினரும் நடத்தி வரும் அதிகாரப் போட்டி, லாவணிக் கச்சேரியாக மாறியுள்ளது.