கொல்கத்தா:
வங்கத்தில் பேயாட்சி நடத்திவரும் மம்தா பானர்ஜி அரசு நீண்டநாட்களுக்குப் பிறகு, அதிரடியான - எழுச்சிமிக்க முழு அடைப்புப் போராட்டத்தை பிப்ரவரி 12 வெள்ளியன்று சந்தித்து இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அழைப்பின் பேரில் காலை 6 மணி துவங்கி மாலை 6 மணி வரை மாநிலமே ஸ்தம்பித்தது. தலைநகர்கொல்கத்தா வெறிச்சோடியது. பல நூற்றுக் கணக்கான மையங்களில் மம்தா அரசுக்கு எதிராகபெரும் போராட்டங்களும் - பேரணிகளும் நடந்தன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், தனது அட்டூழியத்தையும் காட்டுமிராண்டித் தனத்தையும் சற்றும் தளர்த்திக் கொள்ளாத மம்தா அரசு, வியாழனன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், வேலைவாய்ப்புகளை உருவாக்கஅரசை வலியுறுத்தி, தலைநகர் கொல்கத்தாவில் தலைமைச் செயலகம் நோக்கி நடத்திய மாபெரும் பேரணியில், காவல்துறையை ஏவி கொடூரத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் காயமடைந்தனர். அமைதியாக நடைபெற்ற அந்தப் பேரணியையே ஒரு போர்க்களம்போல மாற்றி அமைதியை சீர்குலைத்தது மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசு. மாணவிகள் மீது ஆண் காவலர்கள்அத்துமீறி தாக்குதல் நடத்தினர். எனினும் இளை ஞர்களும் மாணவர்களும் காவல்துறையின் மூர்க்கத்தனமான தாக்குதல்களை உறுதியுடன் எதிர்கொண்டனர்.
இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்த இடதுமுன்னணி, உடனடியாக முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. காங்கிரஸ் கட்சியும் முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்தது. இடதுமுன்னணி விடுத்த அறிக்கையில், மேற்குவங்க தலைமைச் செயலகத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் காவல்துறை நடத்திய தாக்குதல் என்பது ஜாலியன் வாலாபாக் பயங்கரத்தை நினைவூட்டும் வகையில் இருந்தது என்று கடுமையாக சாடியது. இந்த நிலையில் வெள்ளியன்று காலை6 மணி முதல் மாலை 6 வரை 12 மணி நேரமுழு அடைப்புப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் உள்பட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் கண்டன ஊர்வலங்களும் நடைபெற்றன. கொல்கத்தா ஷீல்டா ரயில்முனையத்தில் நடைபெற்ற பேரணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் சுஜன் சக்ரவர்த்தி, காங்கிரஸ் தலைவர் அப்துல் மன்னான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முழு அடைப்பையொட்டி கொல்கத்தா நகரின்ஷியாம் பஜார் உள்பட அனைத்து பகுதிகளும் முற்றாக மூடப்பட்டிருந்தன.மால்டா, பர்தமான், ராய்கஞ்ச், அசன்சால், தாங்குனி உள்ளிட்ட பகுதிகளிலும் வடக்கு 24 பர்கானா, நாடியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மேற்குவங்கத்தில் கோவிட் 19 முழு அடைப்புக்குப் பிறகு 11 மாதங்கள் கழித்து 9-12 வகுப்புகளுக்கு வெள்ளியன்றுதான் முதன்முதலாக வகுப்புகள் துவங்குவதாக இருந்தது. இந்நிலையில் முழு அடைப்பின் காரணமாக பல இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.