கவரட்டி:
லட்சத்தீவுகளில் மத்திய அரசு நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் படேல், அங்கு இதுவரை பஞ்சாயத்து அமைப்புகளுக்கு இருந்த அதிகாரத்தை தன்வசம் மாற்றியும், வெளிநாட்டினர் தீவில் நிலம் வாங்க அனுமதி அளித்தும், இதுவரை மதுவே அனுமதிக்கப்படாத தீவில் மதுக்கடைகளுக்கு அனுமதி கொடுத்தும் எதேச்சதிகாரமாக நடந்து வருகிறார்.
இங்குள்ள மீன் தொழிலை அழிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருப்பதுடன், மாட்டிறைச்சி உணவுக்கும் தடை விதித்துள்ளார்.இதற்கு, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். எழுத்தாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், திரைக்கலைஞர்கள் உள்ளிட்டோரும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, லட்சத்தீவில் பிரபுல் படேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றியது.
இந்நிலையில்தான், பிரபுல் படேல் செயல்பாடுகளுக்கு லட்சத்தீவு பாஜகநிர்வாகிகளே பலர் எதிர்ப்பு தெரிவிக்கஆரம்பித்துள்ளனர். பாஜகவிலிருந்தும் விலகி போராட்டங்களிலும் ஈடுபடத் துவங்கியுள்ளனர்.கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் லட்சத்தீவுகள் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெறும்125 வாக்குகள் பெற்றவர் பாஜக தலைவர் ஹாஜி அப்துல் காதர். இவர் பிரபுல் படேலை ஆதரித்தாலும், பாஜகவின் லட்சத்தீவு பொதுச்செயலாளரான ஹாசிம் உள்ளிட்டோர் ‘பிரபுல் படேல் ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்’ என்று காட்டமாக விமர்சித்துள்ளனர். மேலும் பிரபுல் படேலுக்கு எதிராகஅவர்கள் போராட்டத்திலும் இறங்கியுள்ளனர். கடந்த தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த 125 ஓட்டுக்களுக்கும் பிரபுல் படேல் வேட்டுவைத்து விட்டார் என்று கொதித்து எழுந்துள்ளனர்.