திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொடகர என்னும் இடத்தில் காரில் கறுப்புப்பணத்தை கடத்த முயன்ற வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
பணப்பாய்ச்சல்
இப்பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஷாபி பரம்பில் கொண்டுவந்த அவசர தீர்மனத்துக்கு முதல்வர் பதிலளித்து மேலும் பேசியதாவது:
தவறான செய்திகளை உருவாக்குதல், விசாரணையைத் திசை திருப்புதல் அரசியல் எதிரிகளை இழிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மத்திய நிறுவனங்கள் நடத்தியவிசாரணையை பாஜகவுடன் காங்கிரசும் நியாயப்படுத்தியது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலின்போது மத்தியில் ஆளும் கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டிருக்கிற - வந்த இடத்தை வெளிப்படுத்த முடியாத - பணப் பாய்ச்சல் இது. கேரளத்தில் மக்கள் இதை எல்லாம் பகுத்தறிந்ததும், தவறான பிரச்சாரத்தை நிராகரித்திருப்பதும் நமது ஜனநாயகத்தின் பலமாகும் .
விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில், ஜனநாயகத்தின் மீது பெரிய அளவிலான ஊழலின் கருமேகமும், கறுப்பு பணமும் நமது பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகரிப்பதில் வகித்த பங்கை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தியது இடதுசாரி இயக்கங்கள்தான். கறுப்புப் பணத்தின் வளர்ச்சிக்கு வளமூட்டிய காங்கிரசும், வீரியத்துடன் அதை ஊக்குவிக்கும் பாஜகவும் கேரளத்தில் இடதுசாரி இயக்கங்களை இழிவுபடுத்த ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பது தற்செயல் நிகழ்வுஅல்ல. கறுப்புப் பணத்தின் வளர்ச்சியை தடுக்க வேண்டும், வரிமுறையை வலுப்படுத்த வேண்டும் என்பதில் இடது ஜனநாயகமுன்னணி உறுதியாக உள்ளது. பொதுக் கருவூலத்தை அடையும் பணம் துன்ப துயரத்தில் உள்ள மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இடதுசாரி இயக்கத்தின் உறுதியான நிலைபாடு.
சம்பவம் என்ன?
கோழிக்கோடு சேளன்னூரைச் சேர்ந்த ஷம்ஜீருக்கு சொந்தமான கார் கோழிக்கோட்டிலிருந்து ஆலப்புழைக்கு சென்று கொண்டிருந்ததாகவும், 03.4.2021 அதிகாலை நான்கரை மணிக்கு திருச்சூர் கொடகர அருகில் ஒரு கும்பல் ரூ.25 லட்சத்துடன் காரையும் கடத்திச் சென்றுவிட்டதாக ஷம்ஜீர் கொடகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில்,கடத்திச் செல்லப்பட்ட காரில் ரூ.3.5 கோடி இருப்பது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்ட 20 பேர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர். திருடப்பட்ட ரூ.3.5 கோடியை பயன்படுத்தி வாங்கப்பட்ட 347 கிராம் தங்க நகைகள், மொபைல் போன்கள், கைக்கடிகாரங்களும் மீட்கப்பட்டுள்ளன. விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அமலாக்கஇயக்குநரகத்தின் கொச்சி மண்டல அலுவலகத்திலிருந்து 27.05.2021 அன்று இந்த வழக்கின் விசாரணை தொடர்பான தகவல்களைக் கோரி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தேவையான தகவல்கள் 01.06.2021 அன்று அமலாக்க இயக்குநரகத்திற்கு விசாரணை அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
22 சதவீதம் கறுப்புப் பணப்புழக்கம்
விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் கறுப்புப் பணபுழக்கம் மிகப்பெரிய அளவில் நடந்தது என்பதில் சந்தேகமில்லை. இந்த விஷயத்தை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க மத்திய அரசே பல குழுக்களை நியமித்துள்ளது. இவற்றில் முதலாவது 1950 களில் நியமிக்கப்பட்ட நிக்கோலஸ் கல்தோர் குழு. அதன்பிறகு, 1969 இல் நியமிக்கப்பட்ட வாஞ்சூ கமிட்டி, இந்தியாவில் கறுப்புப் பணம் குறித்த மதிப்பீட்டைநடத்தியது. 1968-69ல் இந்தியாவில் ரூ.1800 கோடி கறுப்புப்பணம் உள்ளதாக குழு கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து, 1984 ஆம் ஆண்டில், மத்திய நிதி அமைச்சகம் கள்ளநோட்டு ஆய்வு செய்ய மற்றொரு நிபுணர் குழுவை நியமித்தது. அவர்களின் கண்டுபிடிப்புகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 21 சதவிகிதம் கருப்பு பணம் என்று காட்டுகின்றன. அதாவது, 1983-84ல் ரூ.48,422 கோடி கறுப்புப் பணம் என்றுஇந்திய அரசின் குழு மதிப்பிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, 2013-14 ஆம் ஆண்டில் 162 நாடுகளின் நிழல் பொருளாதாரங்களைப் பற்றி ஆய்வு செய்த பொருளாதார வல்லுநர்கள், 2013-14 ஆம் ஆண்டில் இந்தியாவில் கறுப்புப் பணத்தின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவிகிதமாக இருப்பதைக் கண்டறிந்தனர். உள்நாட்டு வருவாய் அதிகரித்ததால், 2013-14 ஆம் ஆண்டில் கறுப்புப் பணம் 25.53 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் வரி வருவாய் மிக விரைவாக இல்லை என்றாலும், கறுப்புப் பணத்தின் வளர்ச்சிமுன்னோடியில்லாத வகையில் இருந்தது.
1968 முதல் 1984 வரை, கறுப்புப் பணம் 25 மடங்கு வளர்ந்தது, 2013-14ல் இது 50 மடங்கு வளர்ந்தது. தேர்தல் செயல்முறையைத் திசைதிருப்பவும், நிலம் மற்றும் பங்குச் சந்தையில் ஊக வணிகத்துக்கும் இவை அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. சுருக்கமாக சொன்னால், கறுப்புப் பணத்தின் விரைவானவளர்ச்சி ஜனநாயகத்தின் சாரத்தை அரித்துவிட்டது. தாராளமயமாக்கல் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கம் ஆகியவற்றால் கறுப்புப் பணம் தானாகவே காணாமல் போகும் என்று அந்தநேரத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பிரச்சாரம் செய்தன. ஆனால் புள்ளிவிவரங்கள் , அவ்வாறு இல்லை என்பதை தெளிவுபடுத்துகின்றன. லஞ்சம் மற்றும் பொது நிதியை கொள்ளையடிப்பது கறுப்புப் பணத்தில் பெரும் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த வழியில் உருவாக்கப்படும் சட்டவிரோத பணத்தின் ஒரு பகுதி வெளிநாடுகளுக்குச் சென்று பின்னர் ஹவாலா பணமாகத் திரும்புகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
யாராவது ஒரு பைசா பெற்றார்களா?
இவ்வாறு கடத்தப்பட்ட பணம் மீட்கப்பட்டு மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், சாதாரண மக்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் 2014 தேர்தலின் போது பாஜக கூறியது. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணத்தை திருப்பி கொண்டு வருவதாக பாஜக உறுதியளித்தது. இன்றுவரை, மத்தியில் உள்ள பாஜக அரசு எவ்வளவு கறுப்புப் பணம்பறிமுதல் செய்தது என்பதை மக்களுக்குச் சொல்லத் தயாராகஇல்லை. திரும்பிய பணத்திலிருந்து யாராவது ஒரு பைசா பெற்றார்களா என்பதும் தெரியவில்லை.
2011 ஆம் ஆண்டில், இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது, இந்தியாவில் கறுப்புப் பணத்தின் அளவை மதிப்பிடுவதற்கும், நிவாரணத் திட்டங்களைச் சமர்ப்பிப்பதற்கும் மூன்று முகமைகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இவை தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம், பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசியகவுன்சில் மற்றும் தேசிய நிதி மேலாண்மை நிறுவனம். இவை மூன்று தனித்தனி அறிக்கைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தன. முதல் அறிக்கை டிசம்பர் 30, 2013 அன்றுஇரண்டாவது யுபிஏ அரசாங்கத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டது. மற்ற இரண்டு அறிக்கைகள் முதல் என்டிஏ அரசாங்கத்தின் போது சமர்ப்பிக்கப்பட்டன. (ஜூலை 18, 2014 மற்றும் ஆகஸ்ட் 21, 2014) இந்த மூன்று அறிக்கைகளையும் மக்களுக்கு வெளியிட மத்திய அரசுகள் தயாராக இல்லை. வெளிப்படைத்தன்மை இல்லை என்பதற்கு மற்றொரு உதாரணம் தேவையில்லை. அறிக்கைகள் வெளியிடப்படாததற்கு முக்கிய காரணம் பொருளாதாரத்தில் கறுப்புப் பணம் பெருமளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைக் கண்டறிந்ததே ஆகும் என பத்திரிகைகள் சுட்டிக்காட்டுகின்றன.
செல்லாப்பணமும் கள்ளப்பணமும்
நவம்பர் 8, 2016 அன்று செல்லாப்பணம் அறிவிக்கப்பட்டபோது, கள்ளப் பணத்தை ஒழிப்பதற்கான பொருளாதார நடவடிக்கை இது என்று மத்திய அரசு மக்களிடம் கூறியது. நாணயபுழக்கம் குறையும்போது கறுப்புப் பணம் வீழ்ச்சியடையும் என்றும், நமது பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவிகித பங்கைக் கொண்ட நாணய புழக்கத்தை 6 சதவிகிதமாகக் குறைக்க முடியும் என்றும், நோட்டுகள் மீதான தடைதான் அதற்கான வழி என்றும் மத்திய அரசு அப்போதுகூறியது. ஆனால், ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாணய புழக்கம் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவிகிதமாகும். அமைப்புசாரா துறைக்கும் சாதாரண மக்களுக்கும் ஏராளமான பேரழிவுகளை விதைப்பதைத் தவிர, ரூபாய் நோட்டுகள்மீதான தடையின் மூலம் வேறு என்ன சாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஆராய வேண்டும்.
தேர்தல்களில் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி ஜனநாயகம் சீர்குலைக்கப்படுகிறது என்பது சொல்லாமலே புரியும். அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழும் நேரத்தில் அவற்றை கேலி செய்யும் வகையில் தேர்தல் பத்திரங்களை வெளியிடுவதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. தேர்தல்களில் கறுப்புப் பணம் பாய்வதை உறுதி செய்யவே இந்த சட்டம் எல்லா முயற்சிகளையும் செய்யும். இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.