ராய்ச்சூர்:
ஆக்சிஜனுக்குப் பதில் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம் என்று பாஜக தலைவர் கூறியதைப் பின்பற்றிய நோயாளி, பரிதாபமான முறையில் இறந்து போனார்.கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்சனையும், இதையொட்டி ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜக மூத்ததலைவரும் மக்களவை முன்னாள் உறுப்பினருமான விஜய் சங்கேஷ்வர் என்பவர் புதிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது.‘கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகஅளவில் உள்ளது. உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கில் விட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதன் மூலம்கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்’ என்று அறிவியல்பூர்வமற்ற ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றும்பசவராஜ் மாலிபாடில் (45 வயது) விஜய் சங்கேஷ்வர் கூறியபடி எலுமிச்சை சாற்றை மூக்கில் செலுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கமடையவே, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். எனினும், பசவராஜ் மாலிபாடில்சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இது தற்போது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.‘பொறுப்பான பதவியில் இருந்த ஒருவர், எலுமிச்சைச் சாறுபோன்ற தவறான தகவல்களை அளிக்கக் கூடாது. அவ்வாறு அளித்த தகவல் ஒருவரின் இறப்புக்கு காரணமாகும் என்றால், அது கொலைக்குச் சமமாகும்’ என்று உள்ளூர்வாசிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.