india

img

கோவாக்சினின் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்... பாரத் பயோடெக் இணை இயக்குநர் தகவல்....

ஹைதராபாத்:
பல கோடி தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை விரைவில் வெளியிடுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்த, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனமும், கோவாக்சினை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் உற்பத்தி செய்து வழங்குகின்றன. 

இதில், கோவாக்சின் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடியும் முன்பாக, பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதன் காரணமாகவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் கோவாக்சினுக்கு அனுமதி அளிக்க மறுத்து வருகின்றன.கோவாக்சினை அமெரிக்காவில் விநியோகம் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஒகுஜன் என்றநிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பிடம்  (எப்டிஏ) அனுமதி கோரி கடந்த மார்ச் மாதத்தில் விண்ணப்பம்செய்தது. ஆனால், இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளில் ஒரு பகுதி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்ததால், எப்டிஏ அனுமதி அளிக்க சமீபத்தில் மறுத்தது.இந்நிலையில், ஏற்கனவே பல கோடி கோவாக்சின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் இணை இயக்குநர் மற்றும் கூட்டு நிர்வாக இயக்குநர் சுசித்ரா, டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கோவாக்சினின் பாதுகாப்பும், திறனும் வெளிப்படையானவை. கோவாக்சின் 2 ஆம் கட்ட பரிசோதனைகள் முடித்துள்ளது. 3 ஆம் கட்ட பரிசோதனைகள் ஒழுங்குமுறை அதிகாரிகளால் தொகுக்கப்பட்டு வருகிறது. இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில், கோவாக்சின் மருந்துதான் டெல்டா, ஆல்பா உருமாற்ற வைரசுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்று கூறியுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.