சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் போலி ரெம்டெசிவிர்மருந்துகளை தயாரித்த தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.இதில் மருந்து தயாரித்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் பாதிப்பு அதிகரித்தது. இதை சில கும்பல் பயன்படுத்திக்கொண்டு கள்ளச்சந்தையில் மருந்துகளை அதிக விலைக்கு விற்பதும் போலி மாத்திரைகளை விற்பதும் நடைபெற்று வந்தது. இந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் போலி ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைபஞ்சாப் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதால் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதை தடுக்க அரசே ரெம்டெசிவிர் மருந்துகளை தனியார் மருத்துவமனைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கியது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் ரோபார் பகுதியில் ஒரு கும்பல் போலி ரெம்டெசிவிர் மருந்தை தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அந்த பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரித்த, ஆலையின் உரிமையாளர் உட்பட 6 பேர் கொண்டகும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூலப் பொருட்கள்,குப்பிகள் மற்றும் ரூ.2 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாகவிசாரணை நடைபெற்று வருகிறது.