சிங்காரவேலருக்கு அடுத்த படியாக மூத்த இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரான முசாபர் அகமது, இன்றைய வங்க தேசத்தில் உள்ள முசாபர்பூரில் 1889ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பிறந்தார். 1916 முதலே காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளின் மாநாடுகளில் கலந்து கொண்டார். நண்பர் கவிஞர் நஸ்ருல் இஸ்லாமோடு சேர்ந்து நவயுகம் எனும் பத்திரிகையை தொடங்கி தொழிலாளர்கள் பற்றி எழுதினார். இந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் நூல்களை படித்தார்.
1923ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி கம்யூனிஸ்ட் அகிலத்தைச் சேர்ந்த சௌகத் உஸ்மானி முசாபர் அகமதைச் சந்தித்துப் பேசினார். அவர்களை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து கான்பூர் சதி வழக்கு போட்டனர். 1924 மே 20ஆம் தேதி கான்பூர் சதிவழக்கில் முசாபருக்கு 4ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முசாபர் ரேபரெய்லி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதால் 1925 செப்டம்பர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். 1925ல் கான்பூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டார். 1926ல் லாங்கல் எனும் வார இதழை நடத்தினார். இதில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்டார். 1927ல் ஏஐடியுசியின் உதவித் தலைவரானார். 1928ல் தொழிலாளர்-விவசாயிகள் கட்சியின் பொதுச் செயலாளரானார்.
மீரட் சதி வழக்கு மேல்முறையீட்டில் தண்டனை குறைக்கப்பட்டு 1934ல் விடுதலை பெற்ற பின்னர் கல்கத்தா வந்த முசாபர் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்குவதிலும், விவசாய சங்கத்தை உருவாக்குவதிலும் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவதிலும் தன் நேரத்தைச் செலவிட்டார். 1948ஆம் ஆண்டில் கட்சி தடை செய்யப்பட்டபோது, கைது செய்யப்பட்ட அவர், 1951ஆம் ஆண்டில்தான் விடுதலையானார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் 110 பேர் கொண்ட தேசிய கவுன்சிலின் உறுப்பினராக 1964 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். பின்னர் தன் இறுதிக் காலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக இருந்த அவர் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி காலையில் காலமானார்.
===பெரணமல்லூர் சேகரன்====