புதுதில்லி:
அரசுப் பொதுத்துறை நிறுவனங் களை கைப்பற்றும் தனியார் முதலாளிகள், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று மோடி அரசு உத்தரவாதம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை எப்படியேனும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்- பாஜகவின் நீண்டகாலத்திட்டமாகும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதற்கான வேலையைச் செய்ய, அக்கட்சித் தவறுவது இல்லை. இடஒதுக்கீட்டு வரம்புக்குள் இதுவரை வராத உயர் சாதியினரில், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர் களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டைக்கொண்டுவந்த மோடி அரசு, அதனைமட்டுமே தற்போது தீவிரமாக அமல்படுத்துகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பட்டியல் - பழங்குடி வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தொடர்ந்து இடையூறு செய்துவருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கும் முடிந்த வரை தடையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில்தான், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்க துடித்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை விலைக்கு வாங்கும் முதலாளிகள் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டிய அவசியம்இல்லை என்றும் ஆசை காட்டியுள்ளது.“பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக அதிகாரத்தை, தனியாரிடம் கைமாற்றி விடும்போது, அதன் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து மட்டுமேபேச்சுவார்த்தை நடத்தி உத்தரவாதங் களை பெறுகின்ற வாய்ப்பு இருக்கிறதே ஒழிய, இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்ற வேண்டுமென நிர்ப்பந் திப்பது ஏற்புடையதாக இருக்காது மற்றும் சட்டப்பூர்வமாகவும் அது சாத்தியமில்லை” என்று கூறியிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) விவகாரத்திலேயே, இந்த விஷயத்தை மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தி இருப்பதையும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மார்ச் 23, 2021 அன்று, கனரகத் தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்களவையில் பேசுகையில், “இடஒதுக்கீடு கொள்கை அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், தனியார்மயமாக்கப்படும் நிலையில், அது ஒரு அரசாங்க நிறுவனமாக இருக்காது” என்று கூறியிருந்ததை நினைவுபடுத்தியுள்ளது.அரசாங்கத்தின் இந்த முடிவை, பல்வேறு சட்ட நிபுணர்களும் உறுதிப் படுத்தியுள்ளனர். “பங்குதாரர்களின் ஒப்பந்தம் என்பது ஒவ்வொரு பங்குதாரருக்கும் நிறுவனத்தின் எந்த அளவிற்கு கட்டுப்பாடு இருக்கும் மற்றும்ஆளுகை முடிவுகள் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பதற்கான விதிமுறைகளுடன்தான் ஏற்படுத்தப்படுகிறது. எதிர்கால வணிகத்தை நிர்வகிக்கும் ஒரு ஆவணமாகஇருப்பதால், தற்போதுள்ள ஊழியர் கள் தொடர்பான விதிமுறைகளையும் அது விதிக்க முடியும்” அதன்படியே அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சட்ட நிறுவனமான எல் அண்ட் எல் பார்ட்னர்ஸின் பங்குதாரர் வில்லியம் விவியன் ஜான் கூறியுள்ளார்.“மத்திய அல்லது மாநில அரசு நடத்தும் அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில், பட்டியல்வகுப்பினர் - பட்டியல் பழங்குடியினர்மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின் பற்ற கட்டாயப்படுத்தப்பட்டாலும், அத்தகைய கொள்கை தற்போது தனியார் துறைக்கு பொருந்தாது. சிலமாநிலங்கள் இப்போது தனியார் துறையில் இடஒதுக்கீடு அறிவித்துள்ளன.
ஆனால் இவை வலுவான சட்ட சவால்களை எதிர்கொள்ளவே வாய்ப்பு உள்ளது என்று தொழிலாளர் சட்ட நிபுணரும், சட்ட ஆலோசனை நிறுவனமான அன்ஹாத் சட்டத்தின் நிறுவனருமான மனிஷி பதக் தெரிவித்துள்ளார்.