india

img

இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த கர்நாடக பாஜக அமைச்சர்... வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் வெளியானதால் பதவியை ராஜினாமா செய்தார்....

பெங்களூரு:
பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளம்பெண்ணை ஏமாற்றி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட அமைச்சர் ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண்ணுடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் வாட்ஸ் ஆப்பில் பேசிக்கொண்ட ஆடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. 
கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ் ஜர்கிஹோலி. 60 வயது முதியவர். கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, எடியூரப்பா தலைமையிலான ஆட்சி அமைய முக்கிய காரணமாக விளங்கியவர். அதனாலேயே எடியூரப்பா இவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார்.

இந்நிலையில், வட கர்நாடகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அணைகள் குறித்து ஆவணப் படம் எடுக்கப் போவதாகவும், அதற்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறும் அமைச்சர் ஜர்கிஹோலியை அணுகிய நிலையில், அந்தப் பெண்ணுக்கு அரசுவேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அமைச்சர் ஜர்கி ஹோலி அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துள்ளார். அதேநேரம் வாக்குறுதி அளித்தபடி அரசு வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை. மாறாக, தாங்கள் இருவரும் தனிமையில் இருந்த காட்சிகள் அடங்கிய வீடியோ பெண்ணிடம் இருப்பதை அறிந்துகொண்ட அமைச்சர் ஜர்கிஹோலி, அந்த வீடியோவை தந்து விடுமாறும், இல்லாவிட்டால் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த அந்தப் பெண்ணும் குடும்பத்தினரும், அமைச்சரின் மிரட்டல் குறித்து, கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்கத் தலைவர் தினேஷ் கல்லஹள்ளியிடம் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்தே இந்த விவகாரம் தற்போது வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் தினேஷ் கல்லஹள்ளி பெங்களூரு காவல் ஆணையரிடம் புகாரும் அளித்தார்.இந்த விவகாரம் கர்நாடகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள், மனித உரிமை இயக்கங்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்கள் போராட்டத்தில் இறங்கின. இதையடுத்து அமைச்சர் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.